

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றுவதற்கு இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்கினர். விராட் கோலி அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசி அசத்தினார். ரோஹித் சர்மா இரண்டு அரைசதங்கள் எடுத்தார்.
இந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம். ஆனால், இளம் வீரர்கள் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் தரமான வீரர்கள். அவர்கள் இருவரும் உலகத் தரத்திலான வீரர்கள் என்பதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். அவர்கள் எப்போதும் இந்திய அணிக்காக செய்வதையே செய்திருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக இருவரும் சிறப்பாக விளையாடியுள்ளனர். அதனை மேலும் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அணியில் சமபலத்தை உறுதி செய்வதற்காக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதன் காரணமாக ஹர்ஷித் ராணா போன்ற திறமை வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. பந்துவீச்சு மட்டுமின்றி, 8-வது வீரராக களமிறங்கி விளையாடும் திறனும் அவருக்கு இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அணியை சமபலத்துடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
அணியில் எங்களுக்கு நிலையான மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் தேவை. ஹர்ஷித் ராணா சிறந்த பந்துவீச்சு ஆல்ரவுண்டராக உருவெடுத்தால், அது அணிக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணாவும் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். அணியில் மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுடன் இவர்கள் மூவரும் சிறப்பாக செயல்பட்டால் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வலுவான அணியாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.