

நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணியை கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
நமீபியா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கேரி கிறிஸ்டன் பேசியதாவது: நமீபியா கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து செயல்படவுள்ளதை உண்மையில் கௌரவமாக கருதுகிறேன். நமீபியா அணி மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அவர்களை தயார்படுத்த உள்ளதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான கேரி கிறிஸ்டன், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 2007 ஆம் ஆண்டு நியமிக்கட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வென்று அசத்தியது. அதன் பின், தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் விளையாடும் அணிகளுக்கு பயிற்சி வழங்குவது போன்றவற்றில் ஈடுபட்டார்.
இந்த ஆண்டு பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிறிஸ்டன், சில மாதங்களிலேயே அந்த பொறுப்பிலிருந்து விலகினார். தற்போது, அவர் நமீபியாவின் ஆலோசகராக செயல்பட உள்ளார்.
கடந்த மூன்று டி20 உலகக் கோப்பைத் தொடர்களிலும் (2021, 2022, 2024) நமீபியா அணி விளையாடியுள்ளது. எதிர்வரும் உலகக் கோப்பைத் தொடருக்கும் நமீபியா தகுதி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.