சர்வதேச கிரிக்கெட்டில் பெத் மூனி சாதனை மேல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சாதனை மேல் சாதனை படைத்துள்ளார்.
பெத் மூனி
பெத் மூனிபடம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
Published on
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சாதனை மேல் சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 122 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். இந்தப் போட்டியில் அவர் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஷஸ் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன்பாக, ஆஷஸ் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை இங்கிலாந்தின் நாட் ஷிவர் பிரண்ட் தன்வசம் வைத்திருந்தார். அதனை, தற்போது பெத் மூனி முறியடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சதமடித்த 4-வது வீராங்கனை என்ற பெருமை பெத் மூனியைச் சேரும். அவருக்கு முன்பாக, அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இங்கிலாந்து வீராங்கனைகள் ஹீதர் நைட், டம்மி பீமௌண்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வர்ட் சதம் விளாசியுள்ளனர்.

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சதம் விளாசிய ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 4-வது நபர் என்ற பெருமையும் பெத் மூனியைச் சேரும். அவருக்கு முன்பாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வாட்சன், கிளன் மேக்ஸ்வெல் மற்றும் டேவிட் வார்னர் மூவரும் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சதம் விளாசியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் பெத் மூனி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு முன்பாக, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மெக் லானிங், எல்லிஸ் பெரி மற்றும் அலிஸா ஹீலி ஆகியோர் உள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த பெத் மூனி, ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் டி20 போட்டிகளில் 2 சதங்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.