
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பினையும் இந்தியா இழந்தது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரும் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியை தொடங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபடும் விடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த விடியோவில் ரோஹித் சர்மா பல்வேறு விதமான ஷாட்டுகளையும் விளையாடி பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க முடிகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, மும்பை அணியுடன் இணைந்து அண்மையில் பயிற்சி மேற்கொண்டார். இதனால், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக ஜனவரி 23 ஆம் தேதி மும்பை அணி விளையாடும் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.