இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்!
படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் எடுத்துள்ளது.
Published on

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (ஜனவரி 30) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

170 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய நாட் ஷிவர் பிரண்ட் அரைசதம் கடந்தார். அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹீதர் நைட் 25 ரன்களும், வியாட் ஹாட்ஜ் 22 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிம் கார்த் மற்றும் டார்ஸி பிரௌன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆஷ்லே கார்டனர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா நிதானம்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான ஜியார்ஜியா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபோப் லிட்ச்ஃபீல்டு 20 ரன்களுடனும், அன்னாபெல் சதர்லேண்ட் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 114 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X