
இந்திய அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர் என ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உள்பட பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 40 ஓவர்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின், ரவீந்திர ஜடேஜா மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை கிட்டத்தட்ட வெற்றிக்கு மிக அருகில் எடுத்துச் சென்றார். சிறப்பாக விளையாடிய அவர் 181 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
மிகவும் மதிப்புமிக்க வீரர்
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வரும் நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட்டில் ரவீந்திர ஜடேஜா நம்பமுடியாத அளவுக்கு மிகுந்த போராட்ட குணத்துடன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: லார்ட்ஸ் டெஸ்ட்டில் ரவீந்திர ஜடேஜா விளையாடிய விதம் மிகவும் நம்பமுடியாததாக இருந்தது. அணியின் வெற்றிக்காக ஜடேஜா மிகுந்த போராட்ட குணத்துடன் விளையாடினார். அவருடைய ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது என்றார்.
ஜடேஜாவின் பேட்டிங் குறித்து அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் பேசியதாவது: ஜடேஜாவின் பேட்டிங் அடுத்தக் கட்டத்துக்கு சென்றுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரை பல ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். அவர் கடந்த சில போட்டிகளாக அவருடைய பேட்டிங்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். அவருடைய தடுப்பாட்டம் மிகவும் அற்புதமாக உள்ளது. தன்னை ஒரு பிரதான பேட்டராக அவர் மாற்றிக் கொண்டுள்ளது போன்று தெரிகிறது என்றார்.
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் ஜடேஜாவின் பேட்டிங் குறித்து பேசியதாவது: அழுத்தமான சூழல்களில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்படுவார் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அவருடைய பரந்த அனுபவம் அணிக்கு தேவையான நேரத்தில் மிகுந்த உதவியாக இருக்கிறது. அவர் அணிக்கு மிகவும் மதிப்பு மிக்கவராக உள்ளார் என்றார்.
ஜடேஜாவின் ஆட்டம் குறித்து கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது: இந்திய அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர். அவர் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகிறார். அவரைப் போன்ற வீரர் ஒருவர் கிடைப்பது மிகவும் அரிது. லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஜடேஜா பேட்டிங் செய்த விதம் மிகுந்த பெருமையளிக்கிறது. அவர் மிகுந்த தைரியத்துடன் அற்புதமாக விளையாடினார் என்றார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால், வருகிற ஜூலை 23 ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்கும் நான்காவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Ravindra Jadeja is being praised by many, including Indian team head coach Gautam Gambhir, as the most valuable player in the Indian team.
இதையும் படிக்க: 4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? பயிற்சியாளர் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.