
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிவரும் ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல்நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் குவித்திருந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ராகுல் 46 ரன்களும், எடுத்திருந்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்குர் இருவரும் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும், ஜடேஜா 20 ரன்களில் ஆட்டமிழக்க அவருக்குப் பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் சிறிது நேரம் போராடி 27 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அறிமுகப் போட்டியில் விளையாடிய கம்போஜ் ரன் ஏதுமின்றி வெளியேற, நிதானமாக விளையாடிய தாக்குர் 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
காயத்திலிருந்து மீண்டு வந்து பேட்டிங் ஆடி அசத்திய ரிஷப் பந்த், அரைசதமும் விளாசி வியக்க வைத்தார். மேலும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கார்ஸ் ஆகியோரின் பந்துவீச்சில் அநாயாசமாக சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். முடிவில், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்.
114.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு எக்ஸ்ட்ரா வகையில் 30 ரன்கள் கிடைத்தது.
இங்கிலாந்து அணித் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தேனீர் இடைவேளை முடிவில், ஜாக் கிராலி 33 ரன்களும், பென் டக்கெட் 43 ரன்களும் குவித்துள்ளனர்.
இதையும் படிக்க : நொண்டிக்கொண்டே பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பந்த்..! ரசிகர்கள் கரகோஷம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.