
இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரின் போது பந்து மாற்ற நெறிமுறைகளில் இந்திய அணி நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பழைய பந்து பயன்படுத்தப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ தொடரில் விளையாடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசியாக நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 193 ரன்கள் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தத் தொடரில் டியூக்ஸ் வகை பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்து அதன் வடிவமைப்பை சீக்கிரம் இழந்து விடுகிறது. இதுவே பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 80-வது ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்பட்ட போதிலும் அதன் தன்மையும் விரைவாக மாறியது. இதனால், பந்தை மாற்றக்கோரி இந்திய அணியினர் அடிக்கடி நடுவரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து 90.4-வது ஓவரிலும், 98.4-வது ஓவரிலும் பந்து இரண்டு முறை மாற்றப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி நிலையில், பல முன்னாள் வீரர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து இந்திய அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த டியூக்ஸ் வகை பந்துகள் 10 ஓவர்களிலேயே அதன் வடிவம் மாறி, 30 முதல் 35 ஆண்டுகள் பழைமையான பந்து போன்று மாறிவிடுகிறது. நடுவர்கள் பந்து வளையங்கள் வைத்து ஆய்வு செய்தாலும், அது முறையாக இல்லை.
10 ஓவர்கள் முடிந்த பின்னர் 30 ஓவர்கள் பழைமையான பந்தே கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார். மேலும், ஐசிசியின் பந்தை மாற்றும் நெறிமுறைகளில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து ஐசிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், “நீங்கள் பந்தை மாற்றும் போது அது எத்தனை ஓவர் விளையாடிய பந்து என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் தெரிவித்திருந்தால் 10 ஓவர்கள் விளையாடிய பந்தையே கொடுத்திருப்போம். இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு விதிகளை மாற்றியமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.