பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது: பாக். முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஷகித் அஃப்ரிடி
ஷகித் அஃப்ரிடிபடம் | ஐசிசி
Published on
Updated on
2 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் டிராபியை வென்றது. போட்டியை நடத்திய பாகிஸ்தான் அணி குரூப் ஸ்டேஜிலேயே வெளியேறியது.

சாம்பியன்ஸ் டிராபி கனவு தகர்ந்ததையடுத்து, பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி அகாவும், துணைக் கேப்டனாக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டனர்.

ஐசியூவில் பாகிஸ்தான் கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், எதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் எதன் அடிப்படையில் ஷதாப் கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் அவரது செயல்பாடுகள் எப்படி இருந்தது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணியை முக்கியமான கிரிக்கெட் தொடர்களுக்கு தயார் செய்வது குறித்து பேசுகிறோம். ஆனால், தொடர் நெருங்குகையில் தவறான முடிவினை எடுக்கிறோம். அதனால், மீண்டும் அணியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அதன் தவறான முடிவுகளால் ஐசியூவில் இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும்போதெல்லாம், அவர் அணியில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறார். பாகிஸ்தான் அணியின் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் தொடர்ச்சி என்பது இல்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களை மாற்றி வருகிறது. ஆனால், அந்த முடிவுகள் தவறாக அமைந்தால் கிரிக்கெட் வாரியம் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதில்லை.

பயிற்சியாளர்கள் தங்களது பொறுப்பில் நீடிக்க வீரர்கள் மீது குறை கூறுகிறார்கள். கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மீது பழிசுமத்துகிறது. கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களின் தலைக்கு மேல் தொடர்ச்சியாக கத்தி தொங்கிக் கொண்டிருந்தால், எப்படி நம்முடைய கிரிக்கெட்டில் முன்னேற்றம் இருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நேர்மறையான நபர். உண்மை என்னவென்றால், அவருக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியவில்லை. அவருக்கு கூறப்படும் அறிவுரைகளின் அடிப்படையில் அவர் முடிவெடுக்கிறார். ஒரே நேரத்தில் உங்களால் மூன்று வேலைகளைப் பார்க்க முடியாது என நான் அவரிடம் கூறினேன். அவர் ஒரு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பு என்பது முழுநேர வேலை என்றார்.

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வருகிற மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com