
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
அக்டோபரில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிட்செல் ஸ்டார்க்கின் ஓய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், தேசிய அணி மட்டுமின்றி இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்கள் என மிகவும் பிரபலம்.
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் ரூ.24 கோடிக்கு கொல்கத்தா அணியால் எடுக்கப்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், கடந்தாண்டு தில்லி அணியில் விளையாடி அவர், பின்னர் காயம் காரணமாக விலகினார்.
இந்த நிலையில், 35 வயதான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இருப்பினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 65 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க், 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர், 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லுவதற்கு முக்கிய பங்காற்றினார்.
இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், “டெஸ்ட் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்தவிருக்கிறேன். அதற்குதான் அதிக முன்னுரிமை.
ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு டி20 போட்டியும் குறிப்பாக 2021 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையில் விளையாடி குழுவாக வென்றாலும் மிகவும் வேடிக்கையாக இருந்தது.
2027 ஆம் ஆண்டுக்கு முன்னதாக, இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி மற்றும் ஆஷஸ் தொடர், உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கு இதுதான் சரியான நேரம். மேலும், டி20 உலகக் கோப்பைக்கு சிறந்த அணியைத் தேர்வு செய்யும் குழுவுக்கு வழிவிடுவதாக இருக்கும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.