

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசன் இன்று (ஜனவரி 9) தொடங்கியது. நவி மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மும்பை இந்தியன்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி, முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சீவன் சஞ்சனா 25 பந்துகளில் 45 ரன்களும் (7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நிக்கோலா கேரி 40 ரன்களும், விக்கெட் கீப்பர் கமலினி 32 ரன்களும் எடுத்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் நடின் டி கிளர்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, லாரன் பெல் மற்றும் ஷ்ரேயங்கா பாட்டில் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க பேட்டர்கள் க்ரேஸ் ஹாரிஸ் - கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் நிதானமாக ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 18 ரன்களும், க்ரேஸ் ஹாரிஸ் 18 ரன்களும், தயாளன் ஹேமலதா 7 ரன்களும், ரிச்சா கோஷ் 6 ரன்களும், ராதா யாதவ் ஒரு ரன்னும் பெவிலியன் திரும்பினர்.
பந்துவீச்சில் அசத்திய நடின் பேட்டிங்கிலும் மட்டையை சுழற்றினார். அருந்ததி 20 ரன்களிலும், ஸ்ரேயங்கா ஒரு ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரின் வெற்றிக்கு கடைசி ஓவரில் ஆறு பந்துகளில் 18 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரை நாட் ஷிவர் வீச, களத்தில் இருந்த நடின் டி கிளர்க், முதலில் இரண்டு பந்துகளை ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
மூன்றாவது பந்தில் ஒரு ஆறு, அடுத்து ஒரு நான்கு, மற்றொரு சிக்ஸர் மற்றும் கடைசிப் பந்தில் ஒரு பௌண்டரி அடித்து பெங்களூரு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
முடிவில், 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 7 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 63* ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய நடின் டி கிளர்க் ஆட்டநாயகி விருதை வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.