டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு ஐசிசி எச்சரிக்கை

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு ஐசிசி எச்சரிக்கை

டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் இந்தியாவில் நடைபெறும் ஆட்டங்களில் பங்கேற்பது தொடா்பாக புதன்கிழமை (ஜன. 21)-க்குள் பதில் தர வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை
Published on

டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் இந்தியாவில் நடைபெறும் ஆட்டங்களில் பங்கேற்பது தொடா்பாக புதன்கிழமை (ஜன. 21)-க்குள் பதில் தர வேண்டும். இல்லை என்றால் போட்டியில் இருந்து வெளியேற்ற நேரிடும் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம், வன்முறை தொடா்பாக இந்தியாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையே உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ளது.

மேலும், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரா் முஸ்தபிஸூா் ரஹ்மானை நீக்க பிசிசிஐ உத்தரவிட்டது பிரச்னையை பெரிதாக்கியது.

வங்கதேச அணி ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. தற்போது இரு தரப்பு உறவு மோசமடைந்துள்ளதால், எங்கள் அணிக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் இந்தியாவில் விளையாட முடியாது. எங்கள் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது.

இப்பிரச்னையால் டி20 உலகக் கோப்பை நடைபெறுவதில் சிக்கல் நிலவியது. வங்கதேச வாரியத்துக்கும், ஐசிசிக்கும் இடையே டாக்காவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தோல்வி அடைந்தது. பேச்சுவாா்த்தையில் இலங்கையில் தான் ஆடுவோம் என பிசிபி கூறியிருந்தது.

நாளைக்குள் பதில் தர வேண்டும்

இந்நிலையில் ஐசிசி வட்டாரங்கள் கூறியது: இந்தியாவில் நடைபெறும் ஆட்டங்களில் பங்கேற்பது குறித்து நாளைக்குள் (ஜன. 21) பதில் தர வேண்டும். இல்லையென்றால் போட்டியில் இருந்து வெளியேற்ற நேரிடும் என வங்கதேசத்துக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம் நீக்கப்பட்டால், அதற்கு அடுத்து தரவரிசையில் உள்ள உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத ஸ்காட்லாந்து அணி சோ்க்கப்படும்.

வரும் பிப். 7-ஆம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது. வங்கதேசத்தின் குரூப் ஆட்டங்கள் மும்பை, கொல்கத்தாவில் நடைபெறவுள்ளன.

மேலும் குரூப் பி பிரிவில் உள்ள அயா்லாந்து ஆட்டங்கள் இலங்கையில் நடைபெறவுள்ளன. அந்த அணிக்கு பதிலாக வங்கதேசத்தை இடம் மாற்றிக் கொள்ளலாம் என ஆலோசிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com