

ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்றுவீரராக இவர்தான் இருக்க வேண்டும் இந்திய இளம் வீரர் ஒருவரை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி, வரலாற்றில் முதல்முறையாக தொடரைக் கைப்பற்றியது.
இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுக்க அடுத்து ஆடிய இந்திய அணி, 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாச, அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய ஆல்-ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி 57 பந்துகளில் 53 ரன்கள் (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) விளாசி அசத்தினார். பேட்டிங் மட்டுமின்றி 8 ஓவர்கள் பந்து வீசிய நிதீஷ்குமார் ரெட்டி, 56 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், இந்திய அணியின் பிரதான ஆல்-ரௌண்டரும் அதிரடி ஆட்டக்காரருமான ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக நிதீஷ்குமார் ரெட்டி இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் இர்ஃபான் பதான் பேசுகையில், “நிதீஷ் குமார் ரெட்டி அருமையான வீரர். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக களமிறங்கிய அவர், பேட்டிங்கில் அசத்தினார். தொடர்ந்து அரைசதமும் விளாசினார். அவர் முதல் ஆட்டத்தில் இருந்தே விளையாடியிருக்க வேண்டும்.
அவர் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது பெரிய ஷாட்கள் விளையாட, ஸ்ட்ரைக்கை மாற்றக் கூடிய திறன் அவரிடம் இருக்கிறது. இரண்டுப் போட்டிகளிலும் அவர் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திருந்தார்.
அவர் பெரிய ஷாட்டுகளைக்கூட எளிமையாக விளையாடுகிறார். பந்துவீச்சிலும் மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் அசத்துகிறார். அவரின் வேகமும் பேட்டிங்கின் திறனும் ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக இருக்கும் தகுதியும் அவரிடமிருக்கிறது. அவர் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சில இடங்களில் சொதப்பினாலும் அணி நிர்வாகம் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். அப்படியிருந்தால் இந்திய அணிக்கு நல்ல ஆல்ரௌண்டராக இருப்பார்” என்றார் பதான்.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் டி20, டெஸ்ட் அணிக்காக அறிமுகமான நிதிஷ்குமார் ரெட்டி, மெல்பர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சதம் விளாசியிருந்தார்.
இதுவரை இந்திய அணிக்காக 4 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 10 போட்டிகளில் 396 ரன்கள் குவித்து, 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.