

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் விளையாடாவிட்டால் நஷ்டம் வங்கதேச அணிக்குதான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் கூறியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் விளையாடுமா என்ற பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகக் கூறி இந்தியாவில் உலகக் கோப்பைத் தொடரை விளையாட மாட்டோம் என வங்கதேசம் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், தங்களுக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஐசிசியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது. கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகும், இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் பிடிவாதமாக உள்ளது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக வங்கதேச அணி இந்தியாவுக்கு வர மறுத்தால் நஷ்டம் அந்த அணிக்குதான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக வங்கதேசம் கூறுவதன் காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. தற்போது நியூசிலாந்து அணி இந்தியாவில் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்பாக, தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இவர்கள் யாரும் இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகக் கூறவில்லை. இங்கு வீரர்கள் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான சூழலே உள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக வங்கதேச அணி இந்தியாவுக்கு வர மறுத்தால், நஷ்டம் வங்கதேச அணிக்குதான். உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை தொடர்ச்சியாக மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கனவே தயாராகிவிட்டதால், போட்டிகளை இடமாற்றம் செய்வது மிகவும் கடினம் என்றார்.
எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணி இந்தியாவில் போட்டிகளை விளையாடாவிட்டால், அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து மாற்று அணியாக சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.