

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை எடுக்கும் என அதன் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவில் விளையாட மாட்டோமென வங்கதேசம் கூறி வந்த நிலையில், அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.
உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் வெளியேற்றப்பட்டதையடுத்து, வங்கதேசத்துக்கு ஆதரவாக உலகக் கோப்பைத் தொடரை பாகிஸ்தான் அணியும் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று (ஜனவரி 25) அறிவித்தது.
இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை எடுக்கும் என அதன் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீஃப் உடனான சந்திப்புக்குப் பிறகு மோஷின் நக்வி அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதாவது: பாகிஸ்தான் பிரதமருடன் மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பை மேற்கொண்டேன். அப்போது டி20 உலகக் கோப்பைத் தொடர்பாக அவரிடம் பேசினேன். பாகிஸ்தான் அணிக்கு இருக்கும் தெரிவுகளை மனதில் வைத்து இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என அவர் தெரிவித்தார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பான இறுதி முடிவு வருகிற வெள்ளிக் கிழமை அல்லது அடுத்த திங்கள் கிழமை எடுக்கப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியிடம் அந்நாட்டு பிரதமர், உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட வங்கதேச அணிக்கு நம்மால் முடிந்த அனைத்து விதமான ஆதரவையும் வழங்க வேண்டுமெனக் கூறியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.