தான் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வரை தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பான பேச்சுகள் ஓயப் போவதில்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று (ஜூலை 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
388 ரன்கள் எடுத்தால் வெற்றி இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் இரண்டு போட்டிகளில் சோபிக்காத ரோஹித் சர்மா, நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ரோஹித் சர்மா ஓய்வு பெறப் போகிறார் என்ற தவறான தகவல் பரவி வந்த நிலையில், இப்படியொரு சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தான் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வரை தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பான பேச்சுகள் ஓயப் போவதில்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் இந்திய அணிக்காக அறிமுகமானதிலிருந்தே வெளியிலிருந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளேன். நான் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வரை என்னுடைய சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
உண்மையில் நான் அணிக்காக என்ன பங்களிப்பை வழங்குகிறேன் என்பதுதான் முக்கியம். என்னுடைய கவனம் முழுவதும் அதில்தான் உள்ளது. வெளியிலிருந்து வரும் கருத்துகள் அப்படியே இருக்கட்டும். அவை இல்லாவிட்டால், வேடிக்கை என்பது இருக்காது. அந்த விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை நான் எவ்வாறு எடுத்துக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம். என்னுடைய வேலை நன்றாக பேட் செய்வது, என்னுடைய நாட்டுக்காக சிறப்பாக விளையாடுவது. அதனை நான் அறிமுகமனாதிலிருந்து செய்து வருகிறேன். இனியும் தொடரப் போகிறேன் என்றார்.
லார்ட்ஸில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 110 பந்துகளில் 138 ரன்கள் (17 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Rohit Sharma has stated that discussions regarding his international cricket future will not cease as long as he continues to play for the Indian team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











