கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் வலுவானதாக இருந்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி திடலில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே வீரர்கள் பலரும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களான ஹர்ஷித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் தொடரிலிருந்து முழுவதுமாக விலகினர். மதீஷா பதிரானாவும் தொடக்கப் போட்டிகள் சிலவற்றில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் வலுவானதாக இருந்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீரை அவருடன் விளையாடிய மற்ற வீரர்கள் அனைவரும் பார்க்கும் பார்வையிலிருந்து என்னுடையது வித்தியாசமாக இருக்கும். அவருக்கு எதிராக விளையாடும்போது அவர் எப்போதும் வில்லனாக இருப்பார். ஆனால், வீரர்கள் அவர் அப்படி இருப்பதற்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் அப்படி இருப்பதே கடும் போட்டியாளராக அவரை உருவாக்கியுள்ளது. நாம் யாராலும் விரும்பப்பட வேண்டும் என்பது குறித்து கௌதம் கம்பீர் கவலைப்படுவதில்லை. கேப்டனாக, பயிற்சியாளராக அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை செய்து முடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.
கௌதம் கம்பீருக்கு எதிராக விளையாடும்போது, அவரது அணியை தோற்கடிக்க வேண்டும் எனத் தோன்றும். ஏனெனில், அவர் எதிரணியாக மிகவும் சவாலளிப்பார். ஆனால், அவர் உருவாக்கி வைத்துள்ள சாதனைகளை நாம் மதிக்க வேண்டும். அவரது சாதனைகளைப் பார்த்தால், அவரை நீங்கள் வெகுவாகப் பாராட்டுவீர்கள். அணியின் தலைவராக அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் வலுவாக இருந்தது. ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளான மும்பை, சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளை எடுத்துக் கொண்டால், கௌதம் கம்பீர் - ஷ்ரேயாஸ், தோனி - ஸ்டீஃபன் பிளெமிங் அதில் வெற்றிக் கூட்டணியாக இருப்பார்கள் என்றார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கௌதம் கம்பீர் தலைமையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டங்களை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former South African cricketer Faf du Plessis has said that the Kolkata Knight Riders team led by Gautam Gambhir was very strong.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









