முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஆப்கன் வீரர்கள் அதிரடி; ஜிம்பாப்வேவுக்கு 295 ரன்கள் இலக்கு!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 294 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய செதிக்குல்லா அடல் - படம் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 294 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
செதிக்குல்லா அடல், இப்ராஹிம் ஸத்ரன் அதிரடி!
டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, இப்ராஹிம் ஸத்ரன் மற்றும் செதிக்குல்லா அடல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய செதிக்குல்லா அடல் சதம் விளாசி அசத்தினார். அவர் 110 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இப்ராஹிம் ஸத்ரன் 96 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து 10 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. ஹஸ்மதுல்லா ஷகிதி 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஜிம்பாப்வே தரப்பில் பிராட் ஈவன்ஸ் மற்றும் எர்னஸ்ட் மசுகு தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிளெஸ்ஸிங் முசராபானி இரண்டு விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராஸா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
Summary
Afghanistan, batting first against Zimbabwe in the tri-nation ODI series, were bowled out for 294 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


