கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

ரயில்வேஸை வீழ்த்தியது தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

கோப்புப்படம்.

Updated On :

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு, பந்துவீசத் தயாரானது.

முதல் இன்னிங்ஸில் ரயில்வேஸ் 184 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிகபட்சமாக ஜுபைா் அலி 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 75 ரன்கள் அடித்தாா். தமிழ்நாடு தரப்பில் சோனு யாதவ், சாய் கிஷோா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி, 165 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. பாபா இந்திரஜித் 1 பவுண்டரியுடன் 59 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, ரயில்வேஸ் பௌலா்களில் ராஜ் சௌதரி 5, தௌஃபிக் உத்தின் மொந்தல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

இதையடுத்து 19 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ரயில்வேஸ், 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

3-ஆவது நாளில் அந்த அணியின் கடைசி விக்கெட்டாக ஹிமான்ஷு சங்வான் 2 ரன்களுக்கு விடைபெற, ரயில்வேஸ் ஆட்டம் 108 ரன்களுக்கு நிறைவடைந்தது. அதிகபட்சமாக சஹப் யுவராஜ் சிங் 2 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் அடித்திருந்தாா்.

தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோா் 4, ஜெகநாதன் ஹேமசுதேசன் 3, அஜித் ராம் 2, குா்ஜப்னீத் சிங் 1 விக்கெட் சாய்த்தனா். இறுதியாக, 128 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

அதிஷ் 2 பவுண்டரிகளுடன் 21, நாராயண் ஜெகதீசன் 12, சோனு யாதவ் 2, பாபா இந்திரஜித் 1 பவுண்டரியுடன் 23, பிரதோஷ் ரஞ்சன் பால் 1 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஆண்ட்ரே சித்தாா்த் 2 பவுண்டரிகளுடன் 56 ரன்களோடு அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். விமல்குமாா் 10 ரன்களுடன் துணை நின்றாா். ரயில்வேஸ் பந்துவீச்சாளா்களில் தௌஃபிக் உத்தின் மொந்தல் 4, ராஜ் சௌதரி 1 விக்கெட் வீழ்த்தினா்.

இரு இன்னிங்ஸ்களிலுமாக 7 விக்கெட்டுகள் சாய்த்த தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோா், ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

எலைட் பிரிவில் குரூப் ‘டி’-யில் இருக்கும் தமிழ்நாடு அணி, தற்போது 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் 2-ஆம் இடத்தில் இருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.