

35 வயது நெஹ்ரா, சென்ற வருடம் சென்னை அணிக்குத் தேர்வானபோது அதன் காரணத்தைப் பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏற்கெனவே திறமையான இந்திய மற்றும் வெளிநாட்டு பவுலர்கள் உள்ள அணியில் நெஹ்ராவுக்கு என்ன வேலை என்கிற விமரிசனங்களும் எழுந்தன. ஆனால், இன்றைய தேதியில் ஐபிஎல்-லில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதை யார் எதிர்பார்த்திருக்க முடியும்?
இந்தியா சாம்பியனான 2011 உலகக்கோப்பையில் இடம்பெற்ற வீரர், நெஹ்ரா. அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். இருந்தும் இறுதிப் போட்டியில் அவரால் ஆடமுடியவில்லை. காயம் காரணமாக தங்கமான வாய்ப்பை இழந்தார். அதற்குப் பிறகு நெஹ்ராவின் சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவடைந்தது. எந்தத் தேர்வுக்குழுவினரும் நெஹ்ராவைச் சீந்தவில்லை.
ஐபிஎல்-லிலும் நிலையாக ஒரு அணியில் நீடிக்கமுடியவில்லை. முதல் ஐபிஎல் சீசனில், மும்பை அணிக்காக விளையாடினார் நெஹ்ரா. அடுத்த சீஸனில் இருந்து டெல்லிக்காக ஆடினார். 2011, 2012 வருடங்களில் புனேவுக்காகவும் 2013 டெல்லிக்காகவும் ஆடினார். சென்ற வருடம் 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி அவரைத் தேர்ந்தெடுத்தது.
ஆனால் மோஹித் சர்மா, ஈஷ்வர் பாண்டேவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டதால் சென்ற வருட ஐபிஎல்-லில், நெஹ்ராவால் 4 மேட்சுகள் மட்டுமே ஆடமுடிந்தது. அதிலும் ப்ளே ஆஃப் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்தார். ஐபிஎல்-லில் சென்னைக்கு உதவமுடியாமல் போனாலும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தன்னை நிரூபித்தார் நெஹ்ரா. 5 மேட்சுகளில் 10 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்தார்.
இந்த வருடம் சிஎஸ்கேவின் முதுகெலும்பே நெஹ்ரா தான். முதல் மேட்சில் இருந்தே தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆடிய 5 மேட்சுகளில் இரண்டு முறை மேன் ஆப் தி மேட்ச் பட்டம் வாங்கி விட்டார். பெங்களூருக்கு எதிரான மேட்சிலும் அவர் மேன் ஆஃப் தி மேட்ச் பட்டம் வாங்கியிருக்கவேண்டியது. பதிலாக, ரைனாவின் அதிரடி ஆட்டத்துக்கு விருது வழங்கப்பட்டுவிட்டது. “அடிக்கடி காயங்களால் பாதிக்கப்பட்டாலும் நெஹ்ரா நன்றாகப் பந்துவீசுகிறார். தன் திறமை மீது நம்பிக்கை வைக்கிறார், ஒரு ஃபாஸ்ட் பவுலருக்கு இந்தக் குணம் மிகவும் முக்கியம். நல்ல உடற்தகுதியுடன் உள்ளார்.” என்று நெஹ்ராவைப் பாராட்டுகிறார் தோனி.
யார்க்கர் பந்தில் இந்திய பவுலர்களுக்கு நிபுணத்துவம் கிடையாது. பல இளம் பவுலர்கள் யார்க்கர் பந்து வீச சிரமப்படும்போது யார்க்கர் பந்துகளைத் துல்லியமாக வீசுவதில் வல்லவராக இருக்கிறார் நெஹ்ரா. பெங்களூருக்கு எதிராக நெஹ்ரா நான்கு விக்கெட்டுகள் எடுத்த பிறகு பலருக்கும் எழுந்த கேள்வி - உண்மையிலேயே நெஹ்ராவின் திறமை வீணடிக்கப்பட்டுவிட்டதா? இவர் ஏன் சமீபகாலமாக இந்திய அணியில் ஆடவில்லை?
இதற்கு நெஹ்ராவே பதில் கூறுகிறார். “பெங்களூர் மைதானத்தில் 180 என்பது சமநிலை ஸ்கோர். ஆனால் நாங்கள் சிறப்பாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினோம். கடந்தச் சில வருடங்களாக நான் நன்றாகவே பவுலிங் செய்தும் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் நான் நிறைய விக்கெட்டுகள் எடுக்கவில்லை. சாம்பியன்ஸ் லீகில் அதிக விக்கெட்டுகள் எடுத்தேன். ஆனால், இந்தமுறை நான் கவனிக்கப்பட்டுள்ளேன்.” என்கிறார்.
நெஹ்ரா, மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாவாரா என்பது தெரியாது. ஆனால், ஐபிஎல்-லில் இன்னும் சில ஆண்டுகளுக்கு பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பவுலராக இருப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.