

ரஞ்சி போட்டியில் விளையாடி திறமையை நிரூபித்தால் மட்டுமே ஒரு வீரரின் முழுஆற்றலும் வெளிப்படும் என்பது அடிப்படையான உண்மை.
ஆனால், ரஞ்சி போட்டியில் சாதித்தவர்களுக்குப் பெரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பதே இந்திய கிரிக்கெட்டின் பெரிய பிரச்னையாக உள்ளது. ஐபிஎல்-லில் திறமையை நிரூபித்தால் நேராக இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கிறது. சமீபகால உதாரணங்களாக கரண் ஷர்மா மற்றும் குல்தீப் யாதவைச் சொல்லலாம். அதிலும் கரண் சர்மா ஐபிஎல்-லில் கவனம் பெற்றதால் உடனே டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்றார். இப்போது ஹர்பஜன் சிங், ஐபிஎல்-லினால் மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். எனில், ரஞ்சிப் போட்டியின் அவசியம் தான் என்ன?
சமீபத்தில் நடந்துமுடிந்த ரஞ்சி போட்டியை எடுத்துக்கொள்வோம்.
கர்நாடகா அணி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் ஆனது. இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வினய் குமார் 5 விக்கெட்டுகள் எடுத்தார் (மொத்தமாக 7 விக்கெட்டுகள்). கருண் நாயர் முச்சதம் அடித்தார். (ராகுல் 188 ரன்கள் எடுத்தாலும் அவர் ஏற்கெனவே இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.)
தொடர்ந்து இரண்டு முறை ரஞ்சி கோப்பையை வென்ற கர்நாடகா அணியிலிருந்து எத்தனை பேர் இந்திய டெஸ்ட் அணியில் உள்ளார்கள்? ஒருவர் மட்டுமே. ராகுலைத் தவிர வேறு எந்த ஒரு கர்நாடகா வீரருக்கும் இந்திய அணியில் இடம் இல்லை.
சரி, ஒட்டு மொத்த ரஞ்சியிலும் அதிக ரன்கள் எடுத்த முதல் மூன்று வீரர்கள்: 1. ராபின் உத்தப்பா (912 ரன்கள்), 2. தினேஷ் கார்த்திக் (884), முகுந்த் (858). அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் மூன்று வீரர்கள்: வினய் குமார் (48 விக்கெட்டுகள்), ஷர்துல் தாக்கூர் (48), டி சிவகுமார் (44). இந்த 6 பேருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் இல்லை!
மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோற்றுப் போயிருந்தாலும் வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை, ஜடேஜா நீக்கத்தைத் தவிர. சரியாக ஆடாமல் போனாலும் நீக்குவதில்லை. ரஞ்சிப் போட்டியில் சாதித்தாலும் டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பதில்லை. பிறகு எப்படி ஒரு புதிய திறமை உள்ளே நுழையமுடியும்?
ஹர்பஜன் சிங்கின் தேர்வை எடுத்துக்கொள்வோம். இந்திய அணியில் இடம்பெறாமல் போனாலும் கூட அவரால் ரஞ்சிப் போட்டியில் அதிகம் ஆடமுடியவில்லை. கடந்த ரஞ்சிப் போட்டியில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றார். 6 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால், இந்த ஐபிஎல்-லில் அவர் சிறப்பாக பந்துவீசியதால் வங்கதேச சுற்றுப் பயணத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது என்ன மாதிரியான தேர்வு? ஐபிஎல்-லில் சிறப்பாக பந்துவீசினால் ஒருநாள் அல்லது டி20 போட்டிகளுக்குத்தானே தேர்வு செய்யவேண்டும்?
இதைப் பார்க்கும் ஒரு இளம் வீரருக்கு என்ன தோன்றும்? ரஞ்சி போட்டியில் மாங்கு மாங்கு என்று உழைப்பதை விடவும் ஸ்மார்ட்வொர்க்காக ஐபிஎல்-லில் திறமையை நிரூபித்து இந்திய அணிக்குள் நுழைந்துவிடலாம் என்றுதானே!
சரி, குறைந்தபட்சம் ரஞ்சி மற்றும் ஐபிஎல் என இரண்டிலும் சாதித்தவர்களுக்காவது வாய்ப்பு தந்திருக்கலாமே! ஸ்ரேயாஸ் ஐயர் அப்படி ஒரு சாதனை செய்தவர். ஆனால் அவருக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை! சந்தீப் சர்மாவும் ஐபிஎல், ரஞ்சி என இரண்டிலும் ஓரளவு திறமையை வெளிப்படுத்தியவர். இந்த இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால் தேர்வுக்குழு மீது விமரிசனம் வைக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது
மேலும் பரிசோதனை முயற்சி என்றால் அதை வங்கதேச தொடர் போன்ற சிறிய அணிகளுடன் ஆடக்கூடிய தொடரில்தான் செய்துபார்க்கமுடியும்! வருங்கால வீரர்களைப் பரிசோதித்துப் பார்க்க இதுவே சரியான தருணம். ஆனால், ஆஸ்திரேலியாவில் ஆடிய அதே அணி தான் வங்கதேச தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே புஜாரா, அதே உமேஷ் யாதவ், அதே வருண் ஆரோன்.
ரஞ்சி போட்டியில் சாதிக்கவில்லை என்பது ஒரு விஷயமே இல்லை. ஐபிஎல்-லில் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம் என்கிற தவறான புரிதலைக் கொடுத்துள்ளது இந்தத் தேர்வு. இந்திய கிரிக்கெட் அணியின் வளர்சிக்கு இது சரியான வழிமுறையாக இருக்கமுடியாது. இனி ரஞ்சி போட்டியில் ஆடுகிற வீரர்களுக்கு என்ன மாதிரியான உத்வேகம் இருக்க முடியும்? என்ன சாதித்து என்ன பயன் என்கிற சலிப்பு ஏற்பட்டு விடாதா? தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தனது வியூகத்தை கட்டாயம் மாற்றவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.