பேர்ஸ்டோவும் சதம், வார்னரும் சதம்: கோலி அண்ட் கோ-வை விளாசிய சன்ரைசர்ஸ் 

ஐபிஎல்-இன் இன்றைய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் எடுத்துள்ளது. 
நன்றி: iplt20.com
நன்றி: iplt20.com
Published on
Updated on
2 min read


ஐபிஎல்-இன் இன்றைய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் எடுத்துள்ளது. 

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.   

ஹைதராபாத் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இவர்கள் களமிறங்கியது தான், அதன்பிறகு இந்த பேட்டிங் கதையில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை. பெங்களூரு பந்துவீச்சாளர்கள் பந்துவீச வேண்டும், அதை பேர்ஸ்டோவும் வார்னரும் பவுண்டரிக்கு விரட்ட வேண்டும். பெங்களூரு அணியில் எந்த பந்துவீச்சாளர் வீசினாலும், பேர்ஸ்டோவும் வார்னரும் பவுண்டரிக்கு அடிப்பதுவே நீடித்தது. 

பவர்பிளே ஓவர்களான முதல் 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள். முதல் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள். இப்படி விக்கெட் இழப்பின்றியே ஹைதராபாத் அணி பயணித்தது.

இதனிடையே, பேர்ஸ்டோவ் 28-ஆவது பந்தில் அரைசதம் அடித்தார். 

இந்த பாட்னர்ஷிப்பை வீழ்த்த விராட் கோலி 6-ஆவது பந்துவீச்சாளரை பயன்படுத்தியும் பலனளிக்கவில்லை. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 150 ரன்களையும் கடந்து அதிரடியாக ரன் குவித்தது. அதன்பிறகு, பேர்ஸ்டோவ் தனது 52-ஆவது பந்தில் சதத்தை அடித்தார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாகும்.  

இந்த ஜோடி 185 ரன்களை எட்டிய போது, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. முன்னதாக, முதல் விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்தததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்த கையோடு பேர்ஸ்டோவ் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 56 பந்துகளில் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உட்பட 114 ரன்கள் எடுத்தார். 

அதன்பிறகு களமிறங்கிய விஜய் சங்கர் முதல் பந்திலேயே 94 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து பெங்களூருவை மிரட்டினார். ஆனால், அவர் துரதிருஷ்டவசமாக 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். 

ஆனால், அதன்பிறகு பேர்ஸ்டோவுடன் இணைந்து அரைசதம் அடித்து மிரட்டி வந்த வார்னர் சதத்தை நோக்கி அதிரடியாக ரன் குவித்தார். இதனால், அந்த அணி 18-ஆவது ஓவரிலேயே 200 ரன்களை கடந்தது. 

வார்னர் சதம் அடிப்பதற்கு யூசுப் பதான் ஒத்துழைத்து ஸ்டிரைக்கை அவருக்கே கொடுத்து வந்தார். இதையடுத்து, அவர் கடைசி ஓவரில் தனது 54-ஆவது பந்தில் சதம் அடித்தார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது 4-ஆவது சதமாகும். இந்த இன்னிங்ஸில் அவரது ஆட்டம் வியக்கத்தக்க ஆட்டமாக இருந்தது. அவர் பவுண்டரிகளில் 50 ரன்கள் மட்டும் தான் எடுத்தார். மீதமுள்ள 50 ரன்கள் 1, 2 ரன்களாக ஓடி எடுத்தது. 

பேர்ஸ்டோவ், வார்னரின் சதத்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 231 ரன்கள் எடுத்தது. 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வார்னர் 55 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com