ரெய்னா, சாம் கரண் விளாசல்: சென்னை 188 ரன்கள் குவிப்பு

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
ரெய்னா, சாம் கரண் விளாசல்: சென்னை 188 ரன்கள் குவிப்பு


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். டெல்லி வேகப்பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக வீசி முதலில் டு பிளெஸ்ஸியையும் (0), அடுத்து கெய்க்வாட்டையும் (5) வீழ்த்தினர்.

இதையடுத்து, மொயீன் அலி மற்றும் சுரேஷ் ரெய்னா பாட்னர்ஷிப் அமைத்து படிப்படியாக ரன் ரேட்டை உயர்த்தினர். சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி ரன் ரேட்டை உயர்த்த முயற்சித்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் மொயீன் அலி அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 24 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, ரெய்னா சிக்ஸர்களாக அடித்து அதிரடிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்தில் சிறப்பான சிக்ஸர் அடித்த ரெய்னா 32-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

மறுமுனையில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அம்பதி ராயுடு 16 பந்துகளில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ரவீந்திர ஜடேஜா முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அவரும் முதலிரண்டு பந்துகளில் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால், துரதிருஷ்டவசமாக ரெய்னா 54 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனி 2-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் ரன் ரேட்டில் சற்று மந்தம் ஏற்பட்டது.

எனினும், ஜடேஜா மற்றும் சாம் கரண் கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டாம் கரண் வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா 1 பவுண்டரி, கரண் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாச அந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசினார். முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார் கரண். இதனால், சென்னை அணியின் ஸ்கோர் 180 ரன்களைத் தாண்டியது.

அதன்பிறகு கடைசி ஓவரில் பவுண்டரிகள் போகவில்லை. கரண் கடைசி பந்தில் போல்டானார். அவர் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா 17 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com