சிஎஸ்கே அணிக்கு எதிராகத் தோல்வியடைந்தால் ராஜஸ்தானுக்கு பிளேஆஃப் வாய்ப்பு உள்ளதா?

கொல்கத்தா, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் ஒத்துழைக்கவேண்டும்...
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

ஐபிஎல் 2021 போட்டியில் சிஎஸ்கே அணி 11 ஆட்டங்களில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் அணி, 11 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் ஐபிஎல் 2021 போட்டி பரபரப்பாகிவிடும். மேலும் இன்றைய மற்றொரு ஆட்டத்தில் தில்லி அணி மும்பையைத் தோற்கடித்துவிட்டால் இன்றைய ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய நான்கு அணிகளும் 10 புள்ளிகளுடன் இருக்க நேரிடும். இதனால் அடுத்து வரும் ஆட்டங்களில் தீப்பொறி பறக்கும். மீதமுள்ள ஆட்டங்களை வென்று பிளேஆஃப்புக்குத் தகுதி பெற மூன்று அணிகளும் கடுமையாகப் போட்டியிடும். இந்த நான்கு அணிகளும் 10 புள்ளிகளுடன் இருக்க நேர்ந்தால் அது ஆர்சிபிக்கு வசதியாகிவிடும். அந்த அணி 11 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் உள்ளது.

ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே ராஜஸ்தானைத் தோற்கடித்தால்?

இந்த ஒரு தோல்வியால் போட்டியிலிருந்து ராஜஸ்தான் அணி வெளியேறாது. பிளேஆஃப்புக்குச் செல்ல இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் தோற்று, மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வென்றால் ராஜஸ்தானுக்கு 12 புள்ளிகள் கிடைக்கும். இதைவைத்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியுமா?

முடியும். அதற்கு கொல்கத்தா, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் ஒத்துழைக்கவேண்டும். மீதமுள்ள எல்லா ஆட்டங்களிலும் கொல்கத்தா, பஞ்சாப், மும்பை அணிகள் தோற்க வேண்டும் (இதற்குப் பிறகு வரும் ஆட்டங்களில் மூன்று அணிகளும் ஒன்றுக்கொன்று மோதும் வாய்ப்பில்லை). அப்படி நடைபெற்றால் மும்பை, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் 10 புள்ளிகளுடன் இருக்க, 12 புள்ளிகளை வைத்துக்கொண்டு ராஜஸ்தான் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும். ஆனால் இப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்பதால் ராஜஸ்தான் சிஎஸ்கேவைத் தோற்கடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com