பதவி விலகிய ஜடேஜா, நடந்தது என்ன?: தோனி விளக்கம்

யாரைத் தேர்வு செய்யவேண்டும், அவர்களை எப்போது பயன்படுத்த வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தால் அது நிற்கவே நிற்காது....
பதவி விலகிய ஜடேஜா, நடந்தது என்ன?: தோனி விளக்கம்

சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தபோது ஜடேஜா எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார்.

புணேவில் நடைபெற்ற சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் 99 ரன்களும் கான்வே 85 ரன்களும் எடுத்தார்கள். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 17.5 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு விளையாடிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47, நிகோலஸ் பூரண் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்கள். முகேஷ் செளத்ரி 4 விக்கெட்டுகள் எடுத்தார். ஆட்ட நாயகனாக ருதுராஜ் தேர்வானார்.

ஐபிஎல் 2022 போட்டிக்காக  சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணி முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதாலும் தன்னுடைய பேட்டிங் மோசமானதாலும் கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் ஜடேஜா. இதையடுத்து கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்றுக்கொண்டார். 

நேற்றைய ஆட்டத்தின் முடிவில் பரிசளிப்பு விழாவில் தோனி கூறியதாவது:

கடந்த வருடமே தான் கேப்டனாக நியமிக்கப்படுவோம் என்பது ஜடேஜாவுக்குத் தெரியும். அதனால் அவர் தயாராவதற்கு நேரம் இருந்தது. முதல் இரு ஆட்டங்களில் அவருக்கு சில தகவல்கள் அளிக்கப்பட்டன. அதன்பிறகு முடிவெடுக்கும் உரிமையை அவருக்கு அளித்தேன். ஏனெனில் போட்டி முடிவடைந்த பிறகு யாரோ ஒருவர் கேப்டனாக இருந்தார், நான் டாஸுக்கு (மட்டும்) சென்று கொண்டிருந்தேன் என அவர் நினைக்கக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதை நான் பார்த்துக்கொள்கிறேன், ஃபீல்டிங் எங்கு நிற்கவேண்டும் போன்றவற்றை முதல் இரண்டு ஆட்டங்களில் பார்த்துக் கொண்டேன். அதன்பிறகு நீ தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினேன். அப்படித்தான் தலைமைப்பண்பு என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தால் அது ஒரு கேப்டனாவதற்கு உதவியாக இருக்காது. களத்தில் நீங்கள் தான் முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டும். பிறகு அதற்குப் பொறுப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

நீங்கள் கேப்டனான பிறகு உங்கள் ஆட்டம் உள்பட பல விஷயங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். உங்கள் மூளை எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கும். அதைக் கட்டுப்படுத்துவது சுலபமல்ல. அது பலமான பகுதி. அணியில் யாரைத் தேர்வு செய்யவேண்டும், அவர்களை எப்போது பயன்படுத்த வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தால் அது நிற்கவே நிற்காது. இதனால் தனிப்பட்ட நபரால் ஓய்வெடுக்க முடியாது. கண்ணை மூடிக்கொண்டு தூங்க நினைத்தாலும் மூளை யோசித்துக்கொண்டிருக்கும். ஜடேஜா பேட்டிங் செய்யச் செல்கிறபோதும் அதற்குத் தயாராகும்போதும் கேப்டனாக இருப்பதால் ஏற்படும் சுமை, அவருடைய ஆட்டத்திறனைப் பாதித்தது என நினைக்கிறேன். என் அணியில் ஜடேஜா போன்ற ஒரு பேட்டர், ஃபீல்டர், பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளவே விரும்புவேன். கேப்டன் பதவி இல்லாமல் அவர் நன்றாக விளையாடினாலும் அதுதான் அணிக்கு வேண்டும். மேலும் ஒரு நல்ல ஃபீல்டரையும் இழக்கிறோம். அப்படியும் நாங்கள் 16, 17 கேட்சுகளைத் தவறவிடுகிறோம் என்று வேறு விஷயம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com