பலவீனமாக இருப்பதற்கு ஐபிஎல்லில் இடமில்லை: கெளதம் கம்பீர்

சவாலை எதிர்கொள்வதற்காகவே நாள் பகலாக உழைத்து பயிற்சியில் ஈடுபடுகிறோம் என்றார்.
பலவீனமாக இருப்பதற்கு ஐபிஎல்லில் இடமில்லை: கெளதம் கம்பீர்

பலவீனமாக இருப்பதற்கு ஐபிஎல் போன்ற போட்டிகளில் இடமில்லை என லக்னெள அணி வீரர்களுக்கு முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் அறிவுரை வழங்கியுள்ளார். 

புணே நகரில் நடைபெற்ற லக்னெளவுக்கு எதிரான ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றுள்ளது பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் ரன்கள் எடுப்பதற்குக் கடினமாக இருந்ததால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஷுப்மன் கில். கடைசிவரை விளையாடி ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். 16 பந்துகளை எதிர்கொண்ட தெவாதியாவாலும் ஒரு சிக்ஸரும் அடிக்க முடியாமல் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடிய லக்னெள அணி, 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தீபக் ஹூடா 27 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்ட நாயகன் விருது ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. 

கே.எல். ராகுல் தலைமையிலான லக்னெள அணி, 12 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும். இல்லாவிட்டால் இதர அணிகளால் லக்னெளவைத் தாண்டிச் செல்லாத நிலையிலும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியும்.

குஜராத் அணிக்கு எதிராகத் தோல்வியடைந்ததற்குப் பிறகு லக்னெள அணி வீரர்களிடம் அந்த அணியின் ஆலோசகரும் முன்னாள் வீரருமான கெளதம் கம்பீர் பேசியதாவது: 

தோற்பதில் எவ்விதத் தவறுமில்லை. அதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஓர் அணி தான் வெற்றி பெற முடியும். ஓர் அணி தோற்றே ஆகவேண்டும். இன்று வெற்றிக்கான நம் முயற்சியை கைவிட்டுவிட்டோம். நாம் பலவீனமாக இருந்தோம். விளையாட்டிலும் ஐபிஎல் போட்டியிலும் பலவீனமாக இருப்பதற்கு இடமேயில்லை. அதில் தான் பிரச்னை உள்ளது. நாம் பல அணிகளைத் தோற்கடித்து நம் ஆட்டத்திறனை சிறப்பான முறையில் வெளிப்படுத்தினோம். ஆட்டத்துக்கான சமயோசித அறிவை இன்று நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம். இது உலகத் தரமான போட்டி. சர்வதேசப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுகிறோம். நமக்கு எதிரணி சவாலை அளிக்க வேண்டும் என விரும்புகிறோம். சவாலை எதிர்கொள்ளவே விளையாட்டில் ஈடுபடுகிறோம். சவாலை எதிர்கொள்வதற்காகவே நாள் பகலாக உழைத்து பயிற்சியில் ஈடுபடுகிறோம் என்றார்.

லக்னெள அணி, மே 15 அன்று ராஜஸ்தானையும் மே 18 அன்று கொல்கத்தாவையும் எதிர்கொள்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com