
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெஸ்ஸி மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்த இணை ஆர்சிபிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஜத் படிதாரும் அதிரடியில் மிரட்டினார். அவர் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். கேப்டன் டு பிளெஸ்ஸி அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, படிதார் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தனர். கிரீன் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடினார். ரஜத் படிதார் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் மேக்ஸ்வெல் அதிரடியாக 5 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே தரப்பில் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் சாண்ட்னர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.