
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சுய விமர்சனத்தை செய்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் 1 சதவிகிதம் முன்னேற வேண்டுமென விரும்புவதாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
66 ஐபிஎல் போட்டிகளில் 78 விக்கெட்டுகளும் 63 சர்வதேச டி20 போட்டிகளில் 99 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.
26 வயதாகும் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் போட்டியில் டெத் ஓவரில் சிறப்பாக பந்துவீசுகிறார்.
இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் அர்ஷ்தீப் சிங் பேசியதாவது:
ஒவ்வொரு போட்டியிலும் 1% முன்னேற விரும்புகிறேன்
ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு நாளும் 1 அல்லது 1.5 சதவிகிதம் முன்னேற வேண்டும் என்பதே எனது முக்கியமான நோக்கம்.
உலகத்திலேயே மிகப்பெரிய இடம் எங்கிருக்கிறதென்றால் அது எப்போதும் நாம் முன்னேறுவதற்கான இடம்தான் என நினைக்கிறேன்.
அதனால், எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுய விமர்சனம் செய்து என்னுடைய திறமைகளை உயர்த்த விரும்புகிறேன்.
அது 1 சதவிகிதமோ அல்லது 1.5 சதவிகிதமோ இருந்தாலும் பரவாயில்லை.
சுயநலமற்ற கேப்டன் ஷ்ரேயாஸ்
ஏற்கனவே, துலீப் கோப்பையில் ஷ்ரேயாஸ் தலைமையில் விளையாடியுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளேன்.
அவர் எப்போதும் வீரர்களுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்.
நான் கவனித்ததெல்லாம் அவர் இன்னமும் அதேமாதிரிதான் இருக்கிறார். கடுமையான கட்டளைகளை அளிக்காமல் வீரர்களின் திறமைகளை நம்ப வேண்டும் எனக் கூறுகிறார்.
சுயநலமற்ற தன்மையை அணிக்கு அளிக்கிறார். நாங்கள் அவருக்கு துணையாக இருந்து கோப்பையை மீண்டும் மீண்டும் வெல்ல வேண்டும் என்றார்.
அழுத்தத்தில் பந்துவீச பிடிக்கும்
எனது அணி அழுத்தத்தில் இருக்கும்போது நான் முன்னோக்கி வர விரும்புகிறேன். அது ரன்களை கட்டுப்படுத்துவது ஆகட்டும் அல்லது விக்கெட் எடுப்பதாகட்டும் நான் அதைச் செய்வேன்.
முக்கியமான நேரத்தில் கேப்டன்கள் எனக்கு ஓவரை தருகிறார்கள் எனில் அவர்கள் என்னை நம்புகிறார்கள் என்றே அர்த்தம்.
என்ன சூழ்நிலையாக இருந்தாலும் நான் கூடுதல் பொறுப்பை மிகவும் நேசிக்கிறேன். அழுத்தம் குறித்து நினைக்காமல் பந்தினை எப்படி வீசலாம் என நினைக்கிறேன்.
வெற்றி ஓரிரவில் வந்துவிடாது. எந்தப் பின்னடைவும் எனது பந்துவீச்சைப் பாதிக்காது. எனக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அணி வெற்றிபெற எனது முழுமையையும் தருவேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.