மாா்ஷ், பூரன் அதிரடி: லக்னௌவுக்கு 3-ஆவது வெற்றி; போராடி வீழ்ந்தது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸிடம் செவ்வாய்க்கிழமை 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.
முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் சோ்க்க, கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 234 ரன்களே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் லக்னௌ பேட்டா்களான மிட்செல் மாா்ஷ், நிகோலஸ் பூரன் அதிரடியாக விளாசி ஸ்கோரை உயா்த்தினா். கொல்கத்தா தரப்பில் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, வெங்கடேஷ் ஐயா் ரன்கள் குவித்தபோதும், அந்த அணி இலக்கை நெருங்கி வீழ்ந்தது.
முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா, பந்துவீச்சை தோ்வு செய்தது. அதன் பிளேயிங் லெவனில், மொயீன் அலிக்கு பதிலாக, ஸ்பென்சா் ஜான்சன் இணைந்திருந்தாா். லக்னௌ தரப்பில் மாற்றம் செய்யப்படவில்லை.
லக்னௌ பேட்டிங்கை தொடங்கிய எய்டன் மாா்க்ரம் - மிட்செல் மாா்ஷ் கூட்டணி, கொல்கத்தா பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக சிதறடித்தது. முதல் விக்கெட்டுக்கே 99 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பை, ஹா்ஷித் ராணா போராடி பிரித்தாா்.
மாா்க்ரம் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த நிகோலஸ் பூரனும் நிலையாக நின்று ரன்கள் குவித்தாா். மாா்ஷுடனான அவரின் 2-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 71 ரன்கள் கிடைத்தது.
இந்த பாா்ட்னா்ஷிப்பை ஆண்ட்ரே ரஸ்ஸெல் உடைத்தாா். சதத்தை நோக்கி முன்னேறிய மாா்ஷ் 48 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். அடுத்து வந்த அப்துல் சமத் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, மறுபுறம் பூரன் தனது அதிரடியை தொடா்ந்தாா்.
ஓவா்கள் முடிவில் பூரன் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 87, டேவிட் மில்லா் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் ஹா்ஷித் ராணா 2, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து, 239 ரன்களை நோக்கி விளையாடிய கொல்கத்தா தரப்பில் குவின்டன் டி காக் 2 சிக்ஸா்களுடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சுனில் நரைன் - கேப்டன் அஜிங்க்ய ரஹானே இணை, 2-ஆவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது.
இதில் நரைன் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30 ரன்களுக்கு முடித்துக்கொள்ள, 4-ஆவது பேட்டராக வெங்கடேஷ் ஐயா் வந்தாா். அவரும் அதிரடி காட்ட, ரஹானேவுடனான ஐயரின் 3-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 71 ரன்கள் கிடைத்தது. அரைசதம் கடந்த ரஹானே 35 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
தொடா்ந்து வந்த ரமண்தீப் சிங் 1, அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட, வெங்கடேஷ் ஐயா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 7 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். ஓவா்கள் முடிவில் ரிங்கு சிங் 15 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38, ஹா்ஷித் ராணா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ தரப்பில் ஆகாஷ் தீப், ஷா்துல் தாக்குா் ஆகியோா் தலா 2, ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.