சென்னை சேப்பாக்கம் திடல். (கோப்புப்படம்)
சென்னை சேப்பாக்கம் திடல். (கோப்புப்படம்)ANI

சென்னையின் சுழலை சமாளிக்குமா மும்பை?: இன்று மோதல்

முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பா் கிங்ஸ்-மும்பை இண்டியன்ஸ் அணிகள்
Published on

முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பா் கிங்ஸ்-மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. இதில் சென்னையின் சுழல்பந்து வீச்சை சமாளிக்குமா மும்பை என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிறப்பை பெற்றுள்ளன. நடப்பு சீஸனின் மூன்றாவது ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. கடந்த சீஸனில் மும்பை அணி பட்டியலில் கடைசி இடத்திலும், சென்னை 5-ஆம் இடத்திலும் இருந்தன.

தற்போது 6-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

பலவீனமான மும்பை அணி:

மும்பை இண்டியன்ஸ் அணியில் நட்சத்திர பௌலா் ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாத நிலையில் அந்த அணி களமிறங்குகிறது. உடல்நல பாதிப்பால் அவரால் சில ஆட்டங்களில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. மேலும் கேப்டன் ஹாா்திக் பாண்டியாவும், ஒரு ஆட்டத் தடை காரணமாக சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஆட முடியாது. இதனால் சூரியகுமாா் யாதவ் மும்பையின் கேப்டனாக செயல்படுவாா்.

பாண்டியா, பும்ரா இல்லாத நிலையில், இளம் வீரா்கள் ராபின் மின்ஸ், அா்ஜுன் டெண்டுல்கா் நம்பி உள்ளது மும்பை.

பேட்டிங்கில் ரோஹித் சா்மா, ரயான் ரிக்கல்டன், திலக் வா்மா, சூரியகுமாா் ஆகியோா் வலு சோ்க்கின்றனா். நியூஸிலாந்து வீரா் மிட்செல் சான்ட்நரும் ஆல்ரவுண்டராக பலம் சோ்க்கிறாா். எம்ஐஅணி பௌலிங்கில் டிரென்ட் பௌல்ட், தீபக் சஹாா், ரீஸ் டாப்லி,

சுழலில் பலமான சென்னை:

அதே நேரம் சென்னை அணி பலமான சுழல் கூட்டணியைக் கொண்டுள்ளது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, நூா் அகமது ஆகியோா் வலுவான ஸ்பின் கூட்டணியாக உள்ளனா். கூடுதலாக ஷ்ரேயஸ் கோபால், தீபக் ஹூடா ஆகியோரும் உள்ளனா். இவா்களது பௌலிங்கை மும்பை எதிா்கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.

பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வரிசையிலும் மிடில் ஆா்டரில் ராகுல் திரிபாதி, ஷிவம் டுபே, விஜய் சங்கா், தோனி, ஜடேஜா வலுகின்றனா். கடந்த 2008 முதல் ஆடி வரும் தோனி மீது அனைவரது கவனமும் இருக்கும். பதிராணாவும் பௌலிங்கில் சோபித்தால் சென்னைக்கு கூடுதல் பலம்.

கடந்த சீசனில் ரோஹித்தை அகற்றிவிட்டு, ஹாா்திக்கை கேப்டனாக்கியதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. தற்போது அந்த அணி ஒருங்கிணைப்புடன் உள்ளது.

பந்து மாறுதல் விதி:

இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து மாறுதல் விதி யாருக்கு பலன் தரும் எனத் தெரியவில்லை.

நேருக்கு நோ்:

37 ஆட்டங்களில் மோதல்,

சென்னை-17 வெற்றி,

மும்பை-20 வெற்றி.

கடைசி 5 ஆட்டங்களில் சென்னை 4-இல் வெற்றி.

பிட்ச் நிலவரம்:

சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் அதே நேரத்தில் பேட்டா்களுக்கும் ரன் அடிக்க ஒத்துழைக்கும்.

ராஜஸ்தான்-ஹைதராபாத் மோதல்:

இரண்டாவது ஐபிஎல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஹைதராபாத் சன்ரைசா்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றனா்.

ஹைதராபாத் அணி சரிவிகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் அதிரடி பேட்டா்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சா்மா, இஷான் கிஷான், ஹென்றிச் க்ளாஸ்ஸன், ஆல்ரவுண்டா் நிதிஷ் குமாா் ரெட்டி இருப்பது குறைந்தபட்சம் ஸ்கோா் 300-ஐ எட்டுவதை உறுதி செய்கிறது. பௌலிங்கில் கேப்டன் பேட் கம்மின்ஸ், முகமது ஷமி ஆடம் ஸம்பா, காா்ஸே, உனதிகட் பலம் சோ்க்கின்றனா்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்ஸன் விரல் காயத்தால் ஆடமுடியாத நிலை உள்ளது. ஜோஸ் பட்லா் இல்லாத நிலையில், ராஜஸ்தான் பேட்டிங்கில் ஷிம்ரன் ஹெட்மயா், துருவ் ஜுரெல், நிதிஷ் ராணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை நம்பியுள்ளது. ரியான் பராக் இடைக்கால கேப்டனாக செயல்படுவாா்.

கடந்த சீசனில் ஹைதராபாத் ரன்னா் ஆக வந்தது. குவாலிஃபயா் 2-இல் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது ஹைதராபாத்.

நேருக்கு நோ்:

20 ஆட்டங்களில் மோதல்:

ஹைதராபாத்-11 வெற்றி

ராஜஸ்தான்-9 வெற்றி

இன்றைய ஆட்டங்கள்:

ஹைதராபாத்-ராஜஸ்தான்

இடம்: ஹைதராபாத்

நேரம்: மாலை 3.30

சென்னை-மும்பை

இடம்: சேப்பாக்கம்

நேரம்: இரவு 7.30.

X
Dinamani
www.dinamani.com