ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டியின்போது எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் எம்.எஸ்.தோனி இருக்கிறாரா?
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனிபடம் | சென்னை சூப்பர் கிங்ஸ்
Published on
Updated on
2 min read

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று முன் தினம் (மார்ச் 22) தொடங்கியது. ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸில் பந்துவீச்சில் நூர் அகமது அபாரமாக செயல்பட்டார். பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக செயல்பட்டார்.

சிஎஸ்கே-வுக்கான முடிவுகளை எம்.எஸ்.தோனி எடுக்கிறாரா?

மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டாலும், அணிக்கான முடிவுகளை எம்.எஸ்.தோனி எடுப்பதாக பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான முடிவுகளை ருதுராஜ் கெய்க்வாட்டின் பின்னணியில் இருந்து தான் எடுப்பதாக கூறப்படுவதை மறுத்து எம்.எஸ்.தோனி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோஸ்டாரில் எம்.எஸ்.தோனி பேசியதாவது: மற்ற வீரர்களைப் போன்றே நானும் போட்டிகளுக்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் பேட்டிங் செய்யும்போது, என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதும் அதுதான். கடந்த 2008 ஆம் ஆண்டு நாங்கள் டி20 போட்டிகளில் விளையாடியதற்கும், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. முன்பெல்லாம் ஆடுகளங்கள் பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருவருக்கும் சாதகமானதாக இருக்கும். ஆனால், இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் தற்போது பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் சாதகமாக உள்ளன.

ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயணிக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். அவரிடம் சிறந்த தலைமைப் பண்பு உள்ளது. அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார். இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் ருதுராஜிடம் கூறியது என்னவென்றால், நான் ஒரு அறிவுரை கூறினால் அதனை நீங்கள் கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும் என அர்த்தம் கிடையாது. நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.

கடந்த ஐபிஎல் தொடரின்போது, ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் 99 சதவிகித முடிவுகளை எடுத்தது அவர்தான். பந்துவீச்சில் மாற்றங்கள், ஃபீல்டிங்கில் மாற்றங்கள் போன்ற மிகவும் முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவருக்கு நான் உதவியாக இருந்தேன். வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com