ஸ்டாய்னிஸ் மிரட்டல் அரைசதம்: பெங்களூருவுக்கு 197 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. 
ஸ்டாய்னிஸ் மிரட்டல் அரைசதம்: பெங்களூருவுக்கு 197 ரன்கள் இலக்கு!


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 19-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று (திங்கள்கிழமை) விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தில்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே 3 பவுண்டரியுடன் அதிரடியாக பேட்டிங்கைத் தொடங்கினார் பிரித்வி ஷா. தொடர்ந்து பெங்களூருவின் பிரதான பந்துவீச்சாளர்களான நப்தீப் சைனி மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஓவரிலும் பிரித்வி ஷா சிக்ஸரும் பவுண்டரியுமாக அடிக்க ரன் ரேட் ஓவருக்கு 10 ரன்களைக் கடந்தது. இதன்மூலம் பவர் பிளே முடிவில் தில்லி அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் ஆட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட சிராஜ் தனது முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 23 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து தில்லிக்கு நல்ல அடித்தளம் அமைத்துத் தந்தார்.

பிரித்வி விக்கெட்டுக்குப் பிறகு 5 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட தில்லி அடிக்கவில்லை. இதனிடையே தவான் (32 ரன்கள்), ஷ்ரேயஸ் (11 ரன்கள்) விக்கெட்டையும் தில்லி இழந்தது.

இதையடுத்து, ரிஷப் பந்துடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இணைந்தார். பந்த் நேரம் எடுத்துக்கொள்ள, ஸ்டாய்னிஸ் அதிரடிக்கு மாற பெரிதளவில் நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. 

ஸ்டாய்னிஸ் இமாலய சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்க ரன் ரேட் மீண்டும் உயரத் தொடங்கியது. 

ஒரு கட்டத்தில் பந்தும் அதிரடிக்கு மாறி பவுண்டரிகளாக அடிக்கத் தொடங்கினார். இதனால், தில்லி ரன் ரேட் மளமளவென உயர்ந்தது.

இந்த நிலையில், சிராஜ் வீசிய 19-வது ஓவரில் பந்த் போல்டாகி ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

பந்த் மற்றும் ஸ்டாய்னிஸ் 4-வது விக்கெட்டுக்கு 41 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தனர். தில்லி பேட்டிங்கில் திருப்புமுனை ஏற்படுத்திய பாட்னர்ஷிப்பாக இது அமைந்தது.

இதன்பிறகு, சிராஜ் ஓவரில் பவுண்டரி அடித்த ஸ்டாய்னிஸ் அரைசதத்தை எட்டினார். 

உடானா வீசிய கடைசி ஓவரில் 1 சிக்ஸர் மட்டுமே அடிக்க 20-வது ஓவரில் 12 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தில்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டாய்னிஸ் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். ஹெத்மயர் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு அணித் தரப்பில் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும், மொயீன் அலி மற்றும் இசுரு உடானா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com