சிக்ஸர்களாகப் பறக்கவிட்ட ராயுடு, ஜடேஜா: சிஎஸ்கே 179 ரன்கள் குவிப்பு

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
சிக்ஸர்களாகப் பறக்கவிட்ட ராயுடு, ஜடேஜா: சிஎஸ்கே 179 ரன்கள் குவிப்பு


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்த முறையும் பாப் டு பிளெஸ்ஸியுடன் சாம் கரணே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஆனால், இம்முறை ரன் ஏதும் எடுக்காத நிலையில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதன்பிறகு, வாட்சன் களமிறங்கினார். இருவரும் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், படிப்படியாக ஸ்கோரை உயர்த்தினர். இதனால், ரன் ரேட் 7-ஐத் தொட்டது.

இந்த நிலையில், டு பிளெஸ்ஸி இந்த தொடரில் மற்றுமொரு அரைசதத்தை எட்டினார். ஆனால், அடுத்த பந்திலேயே வாட்சன் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு அதிரடி காட்டத் தொடங்கினார். ஆனால், டு பிளெஸ்ஸி 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.

தோனி 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் ராயுடு தொடர்ந்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து அதிரடி காட்டினார். இதையடுத்து, ரவீந்திர ஜடேஜாவும் மைதானத்தைவிட்டு வெளியே சிக்ஸர் அடித்து ராயுடுவுடன் அதிரடியில் இணைந்தார்.

இதனால், ஓவருக்கு குறைந்தபட்சம் 10 ரன்கள் என்ற வீதத்தில் ரன்கள் கிடைத்தது. ரபாடா வீசிய 19-வது ஓவரில் ராயுடு மற்றும் ஜடேஜா தலா 1 சிக்ஸர் அடிக்க 16 ரன்கள் கிடைத்தன. நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் ஜடேஜா 2 சிக்ஸர்கள் அடித்து மிரட்ட அதிலும் 16 ரன்கள் கிடைத்தன.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராயுடு 25 பந்துகளில் 45 ரன்களும், ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர்.

தில்லி தரப்பில் நோர்க்கியா 2 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே மற்றும் ரபாடா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com