கடைசி 3 ஓவர்களில் 54 ரன்கள்: மும்பை மிரட்டல் பினிஷிங்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. 
கடைசி 3 ஓவர்களில் 54 ரன்கள்: மும்பை மிரட்டல் பினிஷிங்


கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். முதல் 2 ஓவர்களை கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது ஷமி வீச 3-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 9 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் இந்த ஓவரில் போல்டானார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஷமி வேகத்தில் வீழ்ந்தார். இஷன் கிஷனும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால், மும்பை அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதையடுத்து, டி காக்குடன் க்ருணால் பாண்டியா இணைந்தார். இந்த இணை விக்கெட்டைப் பாதுகாத்து அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து விளையாடி வந்தது. ரன் ரேட்டும் 7-க்குக் குறையாமல் இருந்து வந்தது. 

இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில், க்ருணால் பாண்டியா 34 ரன்களுக்கு ரவி பிஷ்னாய் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹார்திக் பாண்டியா முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். அடுத்த ஓவரில் டி காக் பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்க 37-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

ஆனால், அடுத்த ஓவரில் ஹார்திக் பாண்டியா 8 ரன்களுக்கும், அதற்கு அடுத்த ஓவரில் டி காக் 53 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு, கைரன் போலார்ட்டும் நாதன் கூல்டர் நைலும் பினிஷிங் கட்டத்தில் களமிறங்கினர். பஞ்சாப் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், 17-வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் 2 பந்துகளில் போலார்ட் சிக்ஸர் அடித்து மிரட்டினார். 4 மற்றும் 5-வது பந்துகளை கூல்டர் நைல் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால், அந்த ஒரு ஓவரில் மட்டும் மும்பைக்கு 22 ரன்கள் கிடைத்தன.

ஷமி வீசிய 19-வது ஓவரில் கூல்டர் நைல் 2 பவுண்டரிகள் அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன.

ஜோர்டன் வீசிய 20-வது ஓவரை சிக்ஸருடன் தொடங்கினார் போலார்ட். இதன்பிறகு, கடைசி 2 பந்துகளை முறையே சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் முடித்தார். போலார்ட், கூல்டர் நைல் இணை 21 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தது.

இதன்மூலம், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. 

கடைசி 3 ஓவர்களில் மட்டும் 54 ரன்கள் குவிக்கப்பட்டன. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த போலார்ட் 12 பந்துகளில் 34 ரன்களும், கூல்டர் நைல் 12 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.

பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டன் மற்றும் ரவி பிஷ்னாய் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com