பெங்களூருவை 145 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது சென்னை
By DIN | Published On : 25th October 2020 05:05 PM | Last Updated : 25th October 2020 05:09 PM | அ+அ அ- |

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் 44-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். முதல் விக்கெட்டாக பின்ச் 15 ரன்களுக்கு சாம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார். பவர் பிளே முடிந்த முதல் பந்திலேயே படிக்கல் 22 ரன்களுக்கு மிட்செல் சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடத் தொடங்கினர். நடு ஓவர்களில் பெரிதளவு பவுண்டரிகள் போகாததால் ரன் ரேட் ஓவருக்கு 7-க்குக் கீழ் இருந்தது. இருவரும் கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்ட முற்பட்டனர். இந்த நிலையில், தீபக் சஹார் வீசிய 18-வது ஓவரில் டி வில்லியர்ஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய மொயீன் அலி 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் சாம் கரண் வீசிய 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அரைசதத்தை எட்டிய கோலியும் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரை சஹார் சிறப்பாக வீச, ஒரு பவுண்டரி மட்டுமே கிடைத்தது. மாரிஸும் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.