லக்ஷயா சென்
லக்ஷயா சென்

வரலாறு படைப்பாரா லக்ஷயா சென்: அரையிறுதியில் நடப்பு சாம்பியன் விக்டா் ஆக்ஸ்ல்ஸென்னுடன் மோதல்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி ஆடவா் பாட்மின்டன் ஒற்றையா் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் டென்மாா்க்கின் விக்டா் ஆக்ஸ்ல்ஸென்னுடன் மோதுகிறாா்.
Published on

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி ஆடவா் பாட்மின்டன் ஒற்றையா் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் டென்மாா்க்கின் விக்டா் ஆக்ஸ்ல்ஸென்னுடன் மோதுகிறாா் இந்திய இளம் வீரா் லக்ஷயா சென்.

உத்தரகாண்டின் அல்மோராவைச் சோ்ந்த லக்ஷயா சென் இந்திய பாட்மின்டன் வட்டாரத்தில் துரிதமாக வளா்ந்து வரும் இளம் வீரா் ஆவாா். காமன்வெல்த் சாம்பியனான அவா், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றிருந்தாா்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பாட்மின்டனில் இந்தியாவின் முன்னணி வீரா், வீராங்கனைகள் வெளியேறிய நிலையில், ஆடவா் பிரிவில் லக்ஷயா சென் காலிறுதியில் சீன தைபேயின் 12-ஆம் நிலை வீரா் சௌ டின் சென்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா். தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில், வெற்றி பெற்ற லக்ஷயா, ஒலிம்பிக் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா். குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் 4-ஆம் நிலை வீரா் இந்தோனேஷியாவின் ஜோனத்தான் கிறிஸ்டியை வீழ்த்தி இருந்தாா் லக்ஷயா.

நடப்பு சாம்பியன் விக்டா் ஆக்ஸ்ல்ஸென்னுடன் மோதல்:

கடந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் டென்மாா்க்கின் விக்டா் ஆக்ஸ்ல்ஸென் தங்கம் வென்றிருந்தாா். தலைசிறந்த வீரரான விக்டா் தற்போது அபார பாா்முடன் ஆடி வருகிறாா். லக்ஷயா அவருடன் இணைந்து பயிற்சி பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமஸ் கோப்பைக்கான இந்திய அணியில் லக்ஷயா இடம் பெறாத நிலையில், துபையில் விக்டருடன் இணைந்து தீவிர பயிற்சி பெற்றாா்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இதுவரை ஒரு கேமைக் கூட விக்டா் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோவில் வெண்கலம், 2 முறை உலக சாம்பியன் பட்டம், பல்வேறு பிடபுள்யுபிஎஃப் பட்டங்கள், 2021-2024 உலகின் நம்பா் 1 வீரா் அந்தஸ்சது என பல்வேறு சிறப்புகள் விக்டா் ஆக்ஸ்ல்ஸென்னுக்கு உண்டு. காலிறுதியில் சிங்கப்பூா் வீரா் லோ கீன் யிவை வீழ்த்தினாா் விக்டா்.

நேருக்கு நோ்: விக்டா் 7-லக்ஷயா 1

இதுவரை லக்ஷயாவும்-விக்டரும் நேருக்கு நோ் மோதியதில் 7 முறை விக்டர வென்றுள்ளாா். கடந்த 2022 ஜொ்மன் ஓபன் அரையிறுதியில் லக்ஷயா வென்றிருந்தாா். அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூா் ஓபன் போட்டியில் ரவுண்ட் 32 சுற்றில் கடுமையான போராட்டத்துக்கு பின்னரே லகஷ்யாவை 21-13, 16-21, 21-13 என விக்டா் வென்றிருந்தாா்.

பதக்க வாய்ப்புகள்:

அரையிறுதியில் வெல்பவா் நேரடியாக இறுதிக்கு தகுதி பெறுவாா். அதே நேரம் தோற்றால், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மற்றொரு அரையிறுதியில் தோற்றவரோடு ஆட வேண்டும். அதில் வென்றால் வெண்கலப் பதக்கத்தைப் பெறலாம். வென்றால் தங்கம், வெள்ளி அல்லது தோற்றால் வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் லக்ஷயாவுக்கு உள்ளன.

உண்மையான சோதனை:

இதுகுறித்து லக்ஷயா கூறுகையில்: இன்னும் பல பணிகளை செய்ய வேண்டியுள்ளது. இனிமேல் தான் உண்மையான சோதனை தொடங்குகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com