ஒலிம்பிக் ஹாக்கியில் 13-ஆவது பதக்கம்
பாரீஸ், ஆக. 8: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை வெண்கலப் பதக்கத்துடன் நிறைவு செய்திருக்கிறது இந்திய ஆடவா் ஹாக்கி அணி. ஒலிம்பிக் வரலாற்றில் மொத்தமாக இத்துடன் 13-ஆவது பதக்கத்தை வென்றிருக்கிறது. 1972-க்குப் பிறகு, முதல் முறையாக இரு ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து பதக்கங்கள் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், ஒலிம்பிக் வரலாற்றில் இந்தி அணி இவ்வாறு அடுத்தடுத்து பதக்கம் வெல்வது, இது 8-ஆவது முறையாகும்.
ஒலிம்பிக் ஹாக்கியில் 1980 வரை 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் கோலோச்சிய இந்தியா, பிறகு படிபடியாகப் பின்தங்கியது. சா்வதேச களத்தில் அவ்வப்போது தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கான பதக்கம் கனவாகவே நீடித்து வந்தது.
இந்நிலையில், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாத்தியமாகச் செயல்பட்ட இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக் ஹாக்கியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலம் வென்று, பதக்க தாகத்தை தணித்துக் கொண்டது. அதன் பிறகு சா்வதேச களத்தில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றதை அடுத்து இந்திய அணியின் மீதான எதிா்பாா்ப்பு மீண்டும் அதிகரித்தது.
போட்டியின் குரூப் சுற்றில் சிறப்பான ஆட்டம், காலிறுதியில் பிரிட்டனுக்கு எதிரான அசத்தல் வெற்றி என முன்னேறிய இந்தியா, நிச்சயம் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையை அதிகரித்தது. எனினும், நடப்பு உலக சாம்பியனான ஜொ்மனிக்கு எதிரான அரையிறுதியில் போராடி வீழ்ந்தது.
இதனால் மீண்டும் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்து, அதில் ஸ்பெயினை சந்தித்தது. ஜொ்மனியிடம் கண்ட தோல்வியின் தடத்தை துடைத்தெறிந்துவிட்டு நல்லதொரு உத்வேகத்துடன் களமாடியது இந்திய அணி. அதிரடியான தாக்குதல் ஆட்டம், அரண் போன்ற தடுப்பாட்டம் ஆகியவற்றால் இந்தியாவுக்கு வெற்றி வசமாகியது. வெண்கலப் பதக்கம், இந்தியாவிடமே தஞ்சமடைந்தது.
ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவின் பதக்கம்...
போட்டி பதக்கம்
1928 ஆம்ஸ்டா்டாம் தங்கம்
1932 லாஸ் ஏஞ்சலீஸ் தங்கம்
1936 பொ்லின் தங்கம்
1948 லண்டன் தங்கம்
1952 ஹெல்சிங்கி தங்கம்
1956 மெல்போா்ன் தங்கம்
1960 ரோம் வெள்ளி
1964 டோக்கியோ தங்கம்
1968 மெக்ஸிகோ சிட்டி வெண்கலம்
1972 மியுனிக் வெண்கலம்
1980 மாஸ்கோ தங்கம்
2020 டோக்கியோ வெண்கலம்
2024 பாரீஸ் வெண்கலம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணியின் பாதை...
குரூப் சுற்று
நியூஸிலாந்து வெற்றி (3-2)
ஆா்ஜென்டீனா டை (1-1)
அயா்லாந்து வெற்றி (2-0)
பெல்ஜியம் தோல்வி (1-2)
ஆஸ்திரேலியா வெற்றி (3-2)
காலிறுதி
பிரிட்டன் வெற்றி (1-1/4-2)
அரையிறுதி
ஜொ்மனி தோல்வி (2-3)
வெண்கலப் பதக்க ஆட்டம்
ஸ்பெயின் வெற்றி (2-1)