செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

பேலந்தோர்: உலகக் கோப்பையில் தவறவிட்ட தங்கப் பந்து மெஸ்ஸிக்குக் கிடைக்குமா? சாத்தியக் கூறுகள் என்ன?

உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி தவறவிட்ட தங்கப் பந்து விருது பேலந்தோர் மூலமாக அவருக்குக் கிடைக்குமா என்பது குறித்து...

Players contending for the Ballon d'Or award. Messi is in the middle.

பேலந்தோர் விருதுக்கான போட்டியில் இருக்கும் வீரர்கள்; நடுவில் மெஸ்ஸி. - படங்கள்: எக்ஸ் / பேலந்தோர்

Published On :

உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி (39 வயது) தவறவிட்ட தங்கப் பந்து - Golden Ball விருது பேலந்தோர் (Ballond'or) விருது மூலமாகக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விருக்கு 17ஆவது முறையாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த விருதை வாங்குவதற்கு மெஸ்ஸிக்கு போட்டியாளர்களாக ஸ்பெயின் தேசிய அணியிலும், பிஎஸ்ஜி கிளப் அணியிலும் விளையாடிய சிலர் மட்டுமே இருக்கிறார்கள். இந்த விருது மெஸ்ஸிக்குக் கிடைக்குமா இல்லையா என்பது குறித்தான சாத்தியக் கூறுகள் என்னென்ன? இங்கே பார்க்கலாம். 

பிரான்ஸ் நாட்டில் கால்பந்துக்கென பிரத்யேகமாக வெளியாகும் ’பிரான்ஸ் ஃபுட்பால்- France Football’ என்ற மாத இதழின் சார்பாக பேலந்தோர் விருது அளிக்கப்படுகிறது. பிரெஞ்சு மொழிச் சொல்லான இதைத் தமிழில் தங்கப் பந்து என்று அழைக்கலாம்.

கால்பந்து உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படும் இதனை லியோனல் மெஸ்ஸி மட்டுமே இதுவரை அதிகமுறை (8 முறை) பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்த விருது யாருக்கு தரப்படுகிறது? எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்? 

முதலில் தனியாளாக சிறப்பாக, அணியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விளையாடி இருக்க வேண்டும். இரண்டாவதாக அந்த அணி அல்லது அவரது கிளப் அந்த சீசனில் அதிகபட்ச கோப்பைகளை வெல்ல உதவியிருக்க வேண்டும். கடைசியாக வீரரின் நடத்தை, விளையாட்டு மனப்பான்மை ஆகிய மூன்று காரணிகளைப் பொருத்தே வழங்கப்படுகிறது.

இந்த விருதினை தேர்வு செய்ய, ஃபிஃபா தரவரிசையில் இடம்பெற்றிருக்கும் முதல் 100 நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஊடகவியலாளர், அதாவது 100 பேர், வாக்குச் செலுத்துவார்கள். அதன்படி யார் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அவர்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

பொதுவாக, இந்த பேலந்தோர் விருது ஐரோப்பிய நாடுகளில் விளையாடுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இதனால்தான் பீலே, மாரடோனா போன்ற ஜாம்பவான்களுக்கு இந்த விருது கிடைக்காமலேயே போனது. 1956 – 1994 வரை இந்த விதி இருந்தது.

1995 - 2006 காலகட்டத்தில் எந்த நாட்டினராக இருந்தாலும் ஐரோப்பிய கிளப்பில் விளையாடினால் இந்த விருதைப் பெறலாம் என மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த வரிசையில் 1995-ல் லைபீரியாவின் ஜியார்ஜ் வே முதல் முறையாக ஐரோப்பா அல்லாத ஒருவர் இந்த விருதினை வென்றார். மெஸ்ஸியும் அதன்பிறகே 2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021, 2023 ஆகிய சீசன்களில் வென்றார்.

அடுத்ததாக 2006 முதல் ஐரோப்பிய கிளப்பில் அல்லாமல் எந்தவொரு நாட்டின் கிளப்பில் விளையாடினாலும் இந்த விருதுபெற தகுதியானவர்கள் என மாற்றப்பட்டது. இருப்பினும், இதுவரை அப்படி எந்தவொரு வீரரும் இந்த விருதினை வென்றதே இல்லை என்ற துயரம் தொடர்ந்து வருகிறது!

மெஸ்ஸி கடைசியாக 2023-ல் இந்த விருதை வென்றிருந்தார். அப்போது பிஎஸ்ஜி கிளப்பில் இருந்து அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி கிளப்பில் சேர்ந்தார். இருப்பினும் அந்த முறை விருது கிடைத்ததும் பிஎஸ்ஜி அணியின் செயல்பாடுகளுக்காகவே என்பதும் கவனிக்கத்தக்கது. 

கடந்த 2024, 2025 சீசனிலும் மெஸ்ஸி சிறப்பாக விளையாடியும் அவரது பெயர் இந்த 30 பேர் கொண்ட போட்டியாளர்களின் பட்டியலில்கூட இடம்பெறவில்லை. தற்போது, இடம்பெற்றுள்ளது புதுமையான முயற்சியாகப் பாராட்டப்பட்டு வருகிறது. உலகக் கோப்பையில் கவனம் பெற்ற கேப் வெர்டேவின் கோல்கீப்பர் வோசின்காவும் இந்த முறை சிறந்த கோல்கீப்பர் பட்டியலில் போட்டியிடத் தேர்வாகியிருப்பது நிஜமாகவே இந்த விருதின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்தியர்களும் இந்த விருதை வெல்ல வாய்ப்பிருக்கிறது.

முதல் காரணி: தனிச்சிறப்பும் அவரது பாதிப்பும்

இந்த 30 பேரில் 14 ஃபார்வேர்டு வீரர்களும் 9 டிஃபென்டர்களும் 7 மிட்ஃபீல்டர்களும் தேர்வாகியுள்ளார்கள். இதில் அந்தந்தப் பிரிவில் யார் சிறப்பானவர்கள் என்பதை பிரித்துப் பார்த்தாலே யாருக்கு அதிகமான வாய்ப்பிருக்கிறதென எளிதாகவே கண்டறியலாம். 

ஃபார்வர்டு: உஸ்மான் டெம்பெலே (பிஎஸ்ஜி, பிரான்ஸ்), லூயிஸ் டைஸ் (பயர்ன் மியூனிக், கொலம்பியா), எர்லிங் ஹாலண்ட் (மான்செஸ்டர் சிட்டி / நார்வே), ஹாரி கேன் (பயர்ன் மியூனிக் / இங்கிலாந்து), க்விச்சா குவரட்ஸ்கெலியா (பிஎஸ்ஜி / ஜோர்ஜியா),  லமின் யமால் (பார்சிலோனா / ஸ்பெயின்), லொட்டாரோ மார்டினெஸ் (இன்டர் மிலன் / ஆர்ஜென்டீனா), கிலியன்  எம்பாப்பே (ரியல் மாட்ரிட் / பிரான்ஸ்), லியோனல் மெஸ்ஸி (இன்டர் மியாமி / ஆர்ஜென்டீனா), மைக்கேல் ஒலிஸே (பயர்ன் மியூனிக் / பிரான்ஸ்), ஜூலியன் குய்னோன்ஸ் (அல்-கட்சியா / மெக்சிகோ), ஃபெரான் / டோரஸ் (பார்சிலோனா, பிஎஸ்ஜி/ ஸ்பெயின்).

மிட்ஃபீல்டர்: ஜூட் பெல்லிங்ஹம் (ரியல் மாட்ரிட் / இங்கிலாந்து), புருனோ பெர்னாண்டஸ் (மான்செஸ்டர் யுனைடெட் / போர்ச்சுகல்), ஜோவோ நெவிஸ் (பிஎஸ்ஜி / போர்ச்சுகல்), பெட்ரி (பார்சிலோனா / ஸ்பெயின்), ரோட்ரி (மான்செஸ்டர் சிட்டி / ஸ்பெயின்), விடின்ஹா ​​(பிஎஸ்ஜி / போர்ச்சுகல்), வாரன் ஜார்-எமரி (பிஎஸ்ஜி / பிரான்ஸ்).

டிஃபென்டர்: பௌ குபார்ஸி (பார்சிலோனா / ஸ்பெயின்), மார்க் குகுரெல்லா (செல்ஸி, ரியல் மாட்ரிட் / ஸ்பெயின்), கேப்ரியல் (ஆர்செனல் / பிரேசில்), அக்ராஃப் ஹக்கிமி (பிஎஸ்ஜி / மொராக்கோ),  மார்கினோஸ் (பிஎஸ்ஜி / பிரேசில்),  நுனோ மெண்டிஸ் (பிஎஸ்ஜி / போர்ச்சுகல்), வில்லியன் பாச்சோ (பிஎஸ்ஜி / எகுரோம்சல்பா),  உபமேகானோ (பயர்ன் மியூனிக்/ பிரான்ஸ்)

இதில் பிஎஸ்ஜி கிளப்பில் விளையாடிவர்கள் மட்டுமே 10 பேர் தேர்வாகி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. பயர்ன் மியூனிக், பார்சிலோனா, ரியல் மாட்ரிட்டில் இருந்து தலா நால்வரும், ஆர்செனல் கிளப்பில் இருந்து மூவரும் அதிகபட்சமாக தேர்வாகியுள்ளார்கள். 

சிறந்த ஃபார்வர்டு வீரர் யார்?

லியோனல் மெஸ்ஸி: 29 கோல்கள், 23 அசிஸ்ட்டுகள் (இன்டர் மியாமி) தேசிய அணியில் - 13 கோல்கள், 7 அசிஸ்ட்டுகள் உள்பட மொத்தமாக 42 கோல்கள், 30 அசிஸ்ட்டுகள் என 72 கோல்கள் பங்களிப்பு செய்துள்ளார்.

ஹாரி கேன்: மொத்தமாக 73 கோல்கள், 8 அசிஸ்ட்டுகள் உடன் 81 கோல்கள் பங்களிப்பு செய்து அசத்தியுள்ளார்.

எர்லிங் ஹாலண்ட்: மொத்தமாக 58 கோல்கள், 12 அசிஸ்ட்டுகள் உடன் 70 கோல்கள் பங்களிப்பு செய்துள்ளார்.

கிலியன் எம்பாபே: மொத்தமாக 54 கோல்கள், 10 அசிஸ்ட்டுகள் உடன் 64 கோல்கள் பங்களிப்பு செய்துள்ளார்.

லமின் யமால்: மொத்தமாக 25 கோல்கள், 20 அசிஸ்ட்டுகள் உடன் 45 கோல்கள் பங்களிப்பு செய்துள்ளார். ஃபெர்ரன் டோரஸ், லொடாரோ மார்டினெஸ் எல்லாம் இந்த வரிசையில் சற்று பின் தங்கியுள்ளார்கள்.

எண்ணிக்கையைப் பொறுத்தவரை இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் மெஸ்ஸியை விடவும் சிறந்த ஃபார்வேடு வீரராக முன்னிலை வகிக்கிறார். ஆனால், மெஸ்ஸியின் தாக்கம் இன்டர் மியாமில் கோப்பை வெல்லும் அளவுக்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த டிஃபென்டர்களில் நுனோ மெண்டிஸ், பௌ குபார்ஸி, கேப்ரியல், ஹக்கிமி முன்னிலைப் பெறுகிறார்கள். ஆனால், லா லிகா மற்றும் உலகக் கோப்பை வென்றதால் அது குபார்ஸிடமே செல்கிறது.

சிறந்த மிட்ஃபீல்டர்களில் ஜூட் பெல்லிங்ஹம், ரோட்ரி, பெட்ரி, ஃபேபியன் ரூயிஸ், விடின்ஹா, ப்ரூனோ என அனைவருமே சிறந்தவர்களாக முன்னணியில் பங்கு வகிக்கிறார்கள். இருப்பினும் உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி காலிறுதிக்கு முன்னேறாமல் சொதப்பியதாலும் ஸ்பெயின் அணி வென்றதாலும் ரோட்ரி, பெட்ரி, ஃபேபியன் ரூயிஸ் இதில் முன்னிலை வகிக்கிறார்கள்.

இரண்டாவது காரணி: அணி வென்ற கோப்பைகளும் அவர்களது பங்களிப்பும்

30 பேரில் யார் சிறந்த வீரராக இருக்க வாய்ப்பு அதிகம் என்றால் யார் உலகக் கோப்பை வென்றார்களோ அந்த அணியில் இடம்பெற்றவர்களே. இதிலிருக்கும் ஐவரில் நால்வர் சாம்பியன்ஸ் லீக்கை வெல்லாததும் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது.

ஒருவர் மட்டுமே அனைத்து கோப்பைகளையும் வென்றவர் பட்டியலுக்குள் வருகிறார். அவர்தான் பிஎஸ்ஜி கிளப் - ஸ்பெயின் அணிக்காக விளையாடிய மிட்ஃபீல்டர் ஃபேபியன் ரூயிஸ். ஆனால், இவரது பங்களிப்பை விடவும் பலர் அந்த அணியில் பலர் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இவருக்கும் விருது கிடைப்பதில் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கோப்பையே சாம்பியன்ஸ் லீக்தான். ஸ்பெயினில் லா லிகா, இங்கிலாந்தில் பிரீமியர் லீக், பிரான்ஸில் லீக் 1, இத்தாலியில் சீரி 1, ஜெர்மனியில் புன்டெஸ்லீகா கோப்பைகள் முக்கியமானவை. இந்த ஐந்து நாட்டின் அணிகள் சாம்பியன்ஸ் லீக்கில் மோதும். கடைசியாக இதனை பிஎஸ்ஜி அணியினர் வென்றனர். பிஎஸ்ஜி அணியில் இருந்தவர்கள் எவரும் உலகக் கோப்பையினை வெல்லவில்லை. இதனால் யாருக்கு அதிக வாய்ப்பு என்பதை அறிய, இன்னும் கூடுதலாக ஆராய வேண்டியிருக்கிறது.

இந்த 30 பேரில் மெஸ்ஸி, ரோட்ரி, ஹாரி கேன், லமின் யமால், பௌ குபார்ஸி, டெம்பேலே முன்னிலை வகிக்கிறார்கள். ரியல் மாட்ரிட் அணி லா லிகா கோப்பையைக்கூட வெல்லாததால் எம்பாபே, பெல்லிங்கம் இந்தப் போட்டியில் இல்லாமல் போகிறார்கள்.

உலகக் கோப்பையில் அசத்திய ரோட்ரி மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடினார். அவரது அணி பிரீமியர் லீக்கையும் வெல்லவில்லை; சாம்பியன்ஸ் லீக்கையும் வெல்லவில்லை. (2023ல் அவர் பேலந்தோர் விருதை வென்றபோது இரண்டையும் அந்த அணி வென்றிருந்தது). மாறாக, லமின் யமால் மற்றும் பௌ குபார்சி, ஃபெர்ரன் டோரஸ் லா லிகா கோப்பையை வென்றார்கள்; ஆனால், சாம்பியன்ஸ் லீக்கை வெல்லவில்லை. இதனால் நிச்சயமான முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

லியோனல் மெஸ்ஸி ஈஸ்டர்ன் கான்பரென்ஸ் லீக் மற்றும் எம்எல்எஸ் தொடரை இன்டர் மியாமி அணி முதல்முறையாக வெல்ல உதவியுள்ளார். மேலும் அந்தத் தொடரின் நாயகனாகவும் அசத்தினார். அதுமட்டுமின்றி, 2026 உலகக் கோப்பையில் அதிகமுறை ஆட்ட நாயகன் வென்றவரும் அவர் ஒருவர்தான். தனியாளாக அணியை இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேற்றி கொண்டு வந்தார்.

அதிக கோல்கள், அதிக அசிஸ்ட்டுகள் என எல்லாவற்றிலும் முன்னிலைப் பெறுகிறார். இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு - மூன்று வாய்ப்புகளை உருவாக்கியதும் அவர் மட்டும்தான். ஹாரி கேன், லமின் யமால், எம்பாபேவை விடவும் இதில் முன்னிலை வகிக்கிறார்.

உலகக் கோப்பையில் படைப்பாற்றல் திறனுடன் விளையாடுதல் பிரிவில் மெஸ்ஸி இரண்டாம் இடத்துடன் நிறைவு செய்தார். மைக்கல் ஒலிஸே முதலிடம் பிடித்தார். வெறுமனே 0.03 புள்ளி வித்தியாசத்தில் மெஸ்ஸி இதனை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

ரோட்ரிக்கு தங்கப் பந்து கிடைத்ததும் மெஸ்ஸிக்கும் கிடைக்காமல் போனதற்கும் ஒரே காரணம் இறுதிப் போட்டியில் வென்றவர் - தோல்வியுற்றவர் என்பதால் மட்டுமே. மற்றபடி கிளப்பில் ரோட்ரி 11 போட்டிகளில் காயம் காரணமாக விளையாடமல் இருந்தார். மெஸ்ஸி கிளப் போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்.

மூன்றாவது காரணி: நன்னடத்தை மற்றும் நேர்மையான விளையாட்டு உணர்வு

அதிகமாக ஃபௌல்களை செய்பவர்களாக டிஃபென்டர்கள் மட்டுமே இருப்பார்கள். அதனால் மற்ற வீரர்கள் இந்தப் பிரிவில் அதிகமான மதிப்பெண்களையே பெறுவார்கள்.

களத்தில் மட்டுமில்லாமல் வெளியேவும் அவர் எப்படி இருக்கிறார் என்பதை கவனித்தில் எடுத்துக்கொள்கிறார்கள் என நிர்வாகம் கூறியுள்ளது. இதில் இருப்பவர்கள் யாரும் எந்த சர்ச்சையில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதை 41 வயதில் ஸ்டான்லி மேத்திவ்ஸ் என்பவர் 1956ல் வாங்கியுள்ளார். இதற்கடுத்து 36 வயதில் மெஸ்ஸி 2023ல் வாங்கினார். தற்போது 39 வயதில் மெஸ்ஸி இந்த விருதை வாங்கினால், இரண்டாவது வயதான வீரராக தனது சாதனையை மேலும் உயர்த்துவார்.

இளம் வயதில் இந்த விருதை வென்றவராக ரொனால்ட் நஜாரியோ (21 வயதில்) 1997ல் பெற்றுள்ளார். இதனை முறியடிக்க ஸ்பெயின் வீரர்கள் லமின் யமால், பௌ குபார்சியால் மட்டுமே முடியும். இதில் யமாலை விடவும் பௌ குபார்ஸிக்கு அதிகமான வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அவர் ஃபௌல்களை குறைவாகே செய்தே சிறப்பாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு சிறந்த இளம் வீரர் விருது கிடைக்க அதிகமான வாய்ப்பிருக்கிறது.

கிளப் வாரியாக பார்த்தால் பிஎஸ்ஜி - பயர்ன் மியூனிக்- இன்டர் மியாமி - பார்சிலோனா ஆதிக்கம் செலுத்துகிறது. தேசிய அணியாக பார்த்தால் ஸ்பெயின் - ஆர்ஜென்டீனா மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. மூன்றாமிடம் பிடித்த இங்கிலாந்து வீரர்களும் இதில் டாப் 5ல் இடம்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மெஸ்ஸி - ஹாரி கேன் - ரோட்ரிக்கு கடுமையான போட்டியாக அமையும்.

மேற்கூறிய அனைத்து காரணிகளையும் சேர்த்தால் மெஸ்ஸிக்கு மட்டுமே சற்றுக் கூடுதலான மதிப்பெண்கள் கிடைக்க அதிகமான வாய்ப்பிருக்கிறது. அவரது சர்வதேச ஓய்வுக்குப் பிறகு இந்த பேலந்தோர் எனப்படும் தங்கப் பந்து விருது கிடைக்கும்பட்சத்தில் அவருடைய கால்பந்து பயணத்துக்கும், 39 வயதிலும் இளைஞர்களுடன் போட்டியிடும் அவரது கடின உழைப்புக்கும் தன்னிகரில்லா அவருடைய திறமைக்கும் நியாயம் செய்ததாக இருக்குமெனக் கருதுகிறார்கள் கால்பந்து ரசிகர்கள்!

Summary

Ballon d'Or Will Messi miss out on the Golden Ball at the World Cup? What are the possibilities?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.