97 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் (ஐபிஎல்) 9-ஆவது லீக் ஆட்டத்தில் ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸை 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.


இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் (ஐபிஎல்) 9-ஆவது லீக் ஆட்டத்தில் ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸை 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.
அந்த அணியின் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் விளாசினார். மற்றொரு வீரரான கிறிஸ் மோரிஸ் 9 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் 38 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
புணேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய புணே, 16.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
முன்னதாக, டாஸ் வென்ற புணே முதலில் பந்துவீச தீர்மானித்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக, ஆதித்யா தாரே, சாம் பில்லிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆதித்யா தாரே டக் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் களத்துக்கு வந்தார். மறுமுனையில், நிதானமாக ஆடிவந்த சாம் பில்லிங்ஸ் 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் போல்டானார்.
அவரை அடுத்து வந்த ரிஷப் பந்த், சஞ்சு சாம்சனுடன் இணைந்தார். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், 22 பந்துகளில் தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பந்த் ரன் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து கோரே ஆண்டர்சன் களத்துக்கு வர, மறுமுனையில் 63 பந்துகளுக்கு 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆடம் ஸம்பா பந்துவீச்சில் போல்டானார் சஞ்சு சாம்சன். பின்னர் வந்த கிறிஸ் மோரிஸ் அதிரடி காட்டினார்.
இவ்வாறாக, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது டெல்லி. கோரே ஆண்டர்சன் 2, கிறிஸ் மோரிஸ் 38 ரன்களுடன் களத்தில் இருந்தனர். புணே தரப்பில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஆடம் ஸம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
206 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய புணே அணியில் மயங்க் அகர்வால் மட்டும் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரஹானே 10, ராகுல் திரிபாதி 10, தோனி 11, ரஜத் பாட்டியா 16, தீபக் சாஹர் 14 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. எஞ்சிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
இதனால், 16.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு சுருண்டது புணே. டெல்லி தரப்பில் ஜாஹிர் கான், அமித் மிஸ்ரா அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இன்றைய ஆட்டம்
மும்பை-ஹைதராபாத்
இடம்: மும்பை, நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...