2-ஆவது டெஸ்ட் கொழும்பில் இன்று தொடக்கம்: தொடரை வெல்லுமா இந்தியா?
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் வியாழக்கிழமை தொடங்குகிறது.


இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்ட கோலி தலைமையிலான இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது இலங்கை அணி.
அணியில் ராகுல்...: இந்திய அணியைப் பொறுத்தவரையில் இந்தப் போட்டியில் இரு மாற்றங்கள் இருக்கும். வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்தப் போட்டியில் விளையாடாத கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் களமிறங்குகிறார். அதனால் கடந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய தமிழகத்தின் அபிநவ் முகுந்த் இந்தப் போட்டியில் விளையாடமாட்டார்.
கொழும்பு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் 3-ஆவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் கடந்த போட்டியில் அறிமுக வீரராக களம்புகுந்த ஹார்திக் பாண்டியாவுக்கு இந்தப் போட்டியில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான பேட்டிங்: இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கே.எல்.ராகுல், ஷிகர் தவன், சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
இவர்களில் ஷிகர் தவன், புஜாரா, கோலி ஆகியோர் முதல் டெஸ்டில் சதமடித்துள்ளனர். ரஹானே அரை சதமடித்துள்ளார். கே.எல்.ராகுல் கடைசியாக விளையாடிய 7 இன்னிங்ஸ்களில் 6 அரை சதங்களை விளாசியுள்ளார்.
பின்வரிசையில் அஸ்வின், விருத்திமான் சாஹா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். எனவே இந்தப் போட்டியிலும் இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் முகமது சமி, உமேஷ் யாதவ் கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் கூட்டணி கலக்கக் காத்திருக்கிறது.
தினேஷ் சன்டிமல்: இலங்கை அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் தினேஷ் சன்டிமல் மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பது வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தினேஷ் சன்டிமல், களத்தில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 'இன்ஹேலர்' பயன்படுத்திக் கொள்ள ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அணியில் உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷல் மென்டிஸ், தினேஷ் சன்டிமல், மேத்யூஸ், டிக்வெல்லா ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.
எனினும் இவர்கள் யாரும் நிலைத்து நின்று பெரிய அளவில் ரன் குவிக்காதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் நுவான் பிரதீப்-தில்ருவான் பெரேரா கூட்டணி பலம் சேர்க்கிறது. கொழும்பு மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இலங்கை அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்புள்ளது. ரங்கனா ஹெராத்துடன் டி சில்வா, மலின்டா புஷ்பகுமாரா ஆகியோரும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.
இந்தியா (உத்தேச லெவன்): கே.எல்.ராகுல், ஷிகர் தவன், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, அஸ்வின், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சமி.
இலங்கை (உத்தேச லெவன்): உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷல் மென்டிஸ், தினேஷ் சன்டிமல் (கேப்டன்), ஏஞ்ஜலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தனஞ்ஜெயா டி சில்வா, தில்ருவான் பெரேரா, ரங்கனா ஹெராத், மலின்டா புஷ்பகுமாரா, நுவான் பிரதீப்.
போட்டி நேரம்: காலை 10
நேரடி ஒளிபரப்பு:
சோனி சிக்ஸ், சோனி டென் 3
துளிகள்...
* புஜாராவுக்கு இது 50-ஆவது டெஸ்ட் போட்டியாகும். இலங்கையில் இதுவரை இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, அந்த இரண்டிலும் சதமடித்துள்ளார்.
* அஸ்வின் இந்தப் போட்டியில் 50 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் டெஸ்ட் போட்டியில் 2,000 ரன்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெறுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...