/

போர்னா கோரிச் அதிர்ச்சித் தோல்வி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் குரோஷியாவின் போர்னா கோரிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

News image

முதல் சுற்றில் தோற்ற அதிர்ச்சியில் போர்னா கோரிச்.

Updated On :2 ஜனவரி 2017, 7:23 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் குரோஷியாவின் போர்னா கோரிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான போர்னா கோரிச், இந்த முறையும் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த போர்னா கோரிச், தனது முதல் சுற்றில் 3-6, 5-7 என்ற நேர் செட்களில் தகுதிச்சுற்று வீரரான தென் கொரியாவின் ஹியோன் சுங்கிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது சென்னை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. பிரதான கோர்ட்டில் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் போர்னா கோரிச்சும், ஹியோன் சுங்கும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் முதல் கேமிலேயே தனது சர்வீஸை இழந்த கோரிச், அடுத்த கேமில் சுங்கின் சர்வீஸை முறியடித்து சரிவிலிருந்து மீண்டார். இதன்பிறகு 4-ஆவது கேமில் சுங்கின் சர்வீஸை முறியடிக்க கோரிச் கடுமையாகப் போராடினார். ஆனால் விடாப்பிடியாக போராடிய சுங், கோரிச்சின் முயற்சியை முறியடித்தார்.
அடுத்த கேமில் கோரிச்சின் சர்வீஸை முறியடித்து அதிர்ச்சியளித்த சுங், 9-ஆவது கேமில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 3-ஆவது முறையாக கோரிச்சின் சர்வீஸை முறியடிக்க, முதல் செட் 6-3 என்ற கணக்கில் அவர் வசமானது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டில் இருவரும் அபாரமாக ஆடினர். இதனால் 2-ஆவது கேமில் கோரிச் தனது சர்வீஸை தக்கவைக்க கடுமையாகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பிறகு 11-ஆவது கேம் வரை இருவரும் அபாரமாக ஆட, இந்த செட் டைபிரேக்கருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 12-ஆவது கேமில் அபாரமாக ஆடிய சுங், அதில் கோரிச்சின் சர்வீஸை முறியடிக்க, அந்த செட் 7-5 என்ற கணக்கில் அவர் வசமானது. இதனால் கோரிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார். சுங் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டூடி செலாவை சந்திக்கிறார்.
மெத்வதேவ் வெற்றி: முன்னதாக, முதல் ஆட்டத்தில் பிரேசிலின் தியாகோ மான்டீரோ, ரஷியாவின் டேனியல் மெத்வதேவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் தியாகோ தடுமாறினார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மெத்வதேவ், 3 மற்றும் 5-ஆவது கேம்களில் தியாகோவின் சர்வீஸை முறியடித்து 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
ஆனால் 6-ஆவது கேமில் ஆக்ரோஷமாக ஆடிய தியாகோ, ஒரு கட்டத்தில் 40-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் தனது சர்வீஸை காப்பாற்ற கடுமையாகப் போராடினார். இதனால் அந்த கேம் 6 முறை டியூஸ் வரை சென்றது. ஆனாலும் சளைக்காத தியாகோ, இறுதியில் மெத்வதேவின் சர்வீஸை முறியடித்தார்.
7-ஆவது கேமில் தனது சர்வீஸை மிக எளிதாக தக்கவைத்துக் கொண்ட தியாகோ, அடுத்த கேமில் மெத்வதேவுக்கு சற்று நெருக்கடி கொடுத்தார். ஆனால் அதை சமாளித்த மெத்வதேவ், தனது சர்வீஸை இழக்காமல் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து 9-ஆவது கேமில் தியாகோவுக்கு நெருக்கடி கொடுத்த மெத்வதேவ், கடும் போராட்டத்துக்குப் பிறகு அவரின் சர்வீஸை முறியடித்தார். இதனால் முதல் செட் 6-3 என்ற கணக்கில் மெத்வதேவ் வசமானது. இந்த செட் 42 நிமிடங்கள் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் 2-ஆவது கேமிலேயே தியாகோவின் சர்வீஸை எளிதாக முறியடிக்கும் வாய்ப்பு மெத்வதேவுக்கு கிடைத்தது. ஆனால் அதை கோட்டைவிட்ட அவர், விரக்தியின் உச்சத்தில் ராக்கெட்டை வீசினார். இதன்பிறகு தியாகோ சற்று நெருக்கடி கொடுத்தபோதும், அசராமல் ஆடினார் மெத்வதேவ். 4-ஆவது கேமில் தியாகோவின் சர்வீஸை முறியடித்த மெத்வதேவ், 7-ஆவது கேமில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தனது சர்வீஸை தக்கவைத்துக் கொண்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 9-ஆவது கேமோடு ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அவர், 2-ஆவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த செட் 54 நிமிடங்கள் நடைபெற்றது.
டூடி செலா வெற்றி: மற்ற ஒற்றையர் ஆட்டங்களில் இஸ்ரேலின் டூடி செலா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் போஸ்னியா ஹெர்ஸிகோவினாவின் டாமிர் தும்ஹுரையும், பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் நிகோலா மெக்டிக்கையும் தோற்கடித்தனர். தகுதிச்சுற்று வீரரான ஸ்லோவேகியாவின் ஜோசப் கோவாலிக் 6-7 (5), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போர்ச்சுகலின் கேஸ்டாவ் இலியாஸுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
இந்திய ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-விஷ்ணுவர்தன் ஜோடி 2-6, 4-6 என்ற நேர் செட்களில் ஸ்வீடனின் புரூன்ஸ்டிரோம்-சில்ஜெஸ்டிரோம் ஜோடியிடம் தோல்வி கண்டது.
மற்றொரு முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் ஜூர்கன் மெல்ஸர்-ஆர்ஜென்டீனாவின் ரென்úஸா ஆலிவோ ஜோடி 4-6, 7-6 (3) 11-9 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஆன்ட்ரே பெஜிமான்-சீன தைபேவின் யென்-சன் லூ ஜோடியைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

Story image

மறைந்த முதல்வருக்கு மெளன அஞ்சலி
பிரதான கோர்ட்டில் முதல் ஆட்டம் தொடங்குவதற்கு
முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Story image
கோரிச்சை வீழ்த்திய
மகிழ்ச்சியில் ஹியோன் சுங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.