உலகின் தலைசிறந்த வீரரை ஒரு அணியில் வைத்துக்கொண்டு இருப்பது பெருமையாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அந்த வீரரை வைத்து உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது. அதற்கு தனித் திறமையும் தலைமைப் பண்பும் முக்கியம் என்ற கருத்து கிரிக்கெட் விமர்சகர்களால் பெரும்பாலும் சொல்லப்படுவதுண்டு.
அதுவும், இந்திய கிரிக்கெட் அணி 2007-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு வரை மேலே சொன்ன வாசகத்தை இந்திய அணி வீரர்களே அதிகம் கேட்டிருக்கக் கூடும்.
அந்த வாசகங்களுக்கு ஏற்றார் போல அமைந்தார் மஹேந்திர சிங் தோனி. தோனி மிகச்சிறந்த, உலகத் தரம்வாய்ந்த பேட்டிங் நுணுக்கங்கள் கொண்ட வீரர் கிடையாது. ஆனால், பேட்டிங்கில் தனக்கென பிரத்யேக பாணியை கடைப்பிடித்தார்.
2007-ஆம் ஆண்டு தொடங்கி ஏறக்குறைய 9 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்த தோனி அதிலும் தனித்தன்மை கொண்டவராக இருந்தார். மேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக விளங்கினார் என்றால் மிகையில்லை. கபில் தேவ், அஸாருதீன், செளரவ் கங்குலி ஆகியோருடன் ஒப்பிட்டால் தோனியே சிறந்த கேப்டனாக இருந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்த பெருமை தோனியின் தலைமைக்கு மட்டுமே சேரும். 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என தோனி தொட்டதெல்லாம் பொன்னான காலம் இந்திய அணியின் பொற்காலம்.
வழிகாட்டிய சச்சின்: மேற்கிந்தியத் தீவுகளில் 2007-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கு ராகுல் திராவிட் தலைமையில் சென்ற இந்திய அணி, லீக் சுற்றுகளிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து திராவிட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அப்போது, முதல் முறையாக டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற இருந்தது. அதற்கு, சச்சின் தலைமையில் அணியை அனுப்ப பிசிசிஐ தீர்மானித்தது.
அந்நேரத்தில் இந்திய அணிக்கு தோனி புதியவர். எனினும், தனது அதிரடி ஆட்டம் மூலம் ஏற்கெனவே தனி கவனம் பெற்றிருந்தார். இந்நிலையில், டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கானது என்று கூறி போட்டியிலிருந்து விலகிய சச்சின், அணித் தலைமை பிரச்னையில் பிசிசிஐ குழம்பியபோது தோனியை கைகாட்டினார். அதன் பின், தோனி கேப்டன் ஆனது, கோப்பைகளை வென்றது எல்லாம் வரலாறு.
பெருமூச்சு விட்ட திராவிட்: இந்திய அணிக்கு எப்போதும் பெரும் பிரச்னையாக இருப்பது விக்கெட் கீப்பர்களை தேர்ந்தெடுப்பதுதான். 1980-களில் சையத் கிர்மானி, 1990-களில் நயன் மோங்கியா சிறந்த கீப்பர்களாக விளங்கினர். 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் 10 ஆண்டுகள் நிலையான விக்கெட் கீப்பர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சபா கரீம், எம்.எஸ்.கே.பிரசாத், தீப் தாஸ்குப்தா, விஜய் தாஹியா, பார்த்திவ் பட்டேல் என விக்கெட் கீப்பர்கள் வந்து போனார்கள். அணியின் பல சுமைகளை தாங்கி வந்த திராவிட், வேண்டா வெறுப்பாக விக்கெட் கீப்பிங்கையும் பார்த்து வந்தார்.
பின்பு, உத்வேகமான விக்கெட் கீப்பராக அணிக்கு வந்த தினேஷ் கார்த்திக், கீப்பிங்கில் சிறந்து விளங்கினாலும், பேட்டிங்கில் சோபிக்கவில்லை. அப்போதுதான் தோனி அணிக்கு வந்து அதிரடி காட்டினார். இதையடுத்து கங்குலி தலைமையிலான அணியில், ஒரு நாள் போட்டிகளுக்கு தோனியும், டெஸ்ட் போட்டிகளுக்கு தினேஷும் கீப்பர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், தொடர்ந்து சிறப்பாக ஆடி டெஸ்ட் அணிக்கும் கீப்பரானார் தோனி.
அதிரடி நீக்கமும், அதிருப்திகளும்: தோனி மிகச்சிறந்த கேப்டனாக இருந்தாலும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. முக்கியமாக, சீனியர் வீரர்களான கெளதம் கம்பீர், யுவராஜ் சிங், விரேந்திர சேவாக், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு தோனிதான் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு.
தோனி கேப்டனாக பொறுப்பேற்ற சில ஆண்டுகளிலேயே தனக்கென விதிமுறைகளை வகுத்துக்கொண்டார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அணியில் இருந்து தூக்கப்படுவர். அதில் தயவுதாட்சன்யம் காட்டவே இல்லை. அவருக்கு பதில் வேறு வீரர், அவரும் இல்லையென்றால் மற்றொருவர் என தோனி சென்றுகொண்டிருந்தார். அதன் பலனாகத்தான் அஸ்வின், கோலி, ரோகித், ரஹானே, பூம்ரா, சமி போன்ற வீரர்கள் கிடைத்தார்கள்.
யானைக்கும் அடி சறுக்கியது: தோனியின் தலைமையிலான இந்திய அணி 2015 உலகக் கோப்பை வரை வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அதன்பிறகு பெரிய அளவில் சோபிக்கவில்லை. 2016-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில், சொந்த மண்ணிலேயே மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது.
கேப்டன் தோனி முன்புபோல வேகமான முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார், அவரால் துடிப்பாக செயல்பட முடியவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. எனினும், சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரை தோனியே கேப்டனாக தொடருவார் என பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், திடீரென கேப்டன் பதவியை துறந்துள்ளார் தோனி.
மக்களின் கேப்டன்: கிரிக்கெட் போட்டியில் யாரை எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கேப்டனின் புத்திசாலித்தனம் இருக்கிறது. தோனியை பொறுத்தவரையில் அவர் களத்தில் இருக்கும் 11 பேரை கையாளுவதில் மிகவும் தேர்ந்தவர். தோனியின் வியூகம் அல்லது போட்டிக்கான திட்டம் இன்னமும் பலருக்கும் புரியாத புதிர். தோனி தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியது, அவரது தீவிர ரசிகர்களுக்கு வருத்தமே என்றாலும், தோனி என்ற மிகச் சிறந்த விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனும் மீண்டும் வெளிப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக உள்ளது. ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் இருந்து வந்து இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையை பெற்றுத் தந்த தோனி, காலத்தால் கடந்துபோன கேப்டன்கள் மத்தியில் மக்களின் கேப்டனாக எப்போதும் இருப்பார்.
-ஆர்.ஜி.ஜெகதீஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்

4.4.1976: காமராஜுக்கு 'பாரத ரத்னா' விருது: அவரது சகோதரி ராஷ்டிரபதியிடம் பெற்றார்
வங்கி மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


