
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நாகபுரி கிளை உதவி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், கடந்த திங்கள்கிழமை பணியில் இணைவதற்கான நடைமுறைகளை நிறைவு செய்தார். பின்னர், இலங்கைக்கு எதிரான தொடருக்காக செவ்வாய்க்கிழமை அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், 'சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாகவே இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக அந்நாட்டுக்கு புறப்படுவதற்கு முன்பாக அவர் ஆர்பிஐ 'அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
அப்போதே ஆர்பிஐ அதிகாரிகள் அவரது நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியபோதிலும், அவர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்ததன் காரணமாக பணியில் இணையும் நடைமுறை காலதாமதமானது' என்றன.
உமேஷ் யாதவ், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறை பணியில் சேர்வதற்காக முயன்று தேர்வில் தோல்வியடைந்ததால் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
கொள்ளை: இதனிடையே, நாகபுரியில் உள்ள உமேஷ் யாதவின் வீட்டில் திங்கள்கிழமை இரவு ரூ.45,000 மற்றும் 2 செல்லிடப்பேசிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இரவு 7 முதல் 9 மணிக்குள்ளாக கொள்ளையர்கள் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.