சர்ச்சைக்குரிய பேட்டி: அஸ்வின் விளக்கம்!
விமான விபத்துக்குப் பிறகு மான்செஸ்டர் அணி புகழ்பெற்று விளங்கியதுபோல சென்னை அணியும்..


1958 பிப்ரவரி 6 அன்று மியூனிச் விமான நிலையத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கால்பந்து வீரர்களை ஏற்றி வந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதையடுத்து எட்டு வீரர்களுடன் 15 பயணிகள் பலியானார்கள்.
இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடைக்காலத் தடையுடன் ஒப்பிட்டு அஸ்வின் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்துக்குப் பிறகு மான்செஸ்டர் அணி புகழ்பெற்று விளங்கியதுபோல சென்னை அணியும் இந்தத் தடைக்குப் பிறகு மேலும் வலுவாக இருக்கும் என்று அஸ்வின் பேசியதைச் சமூகவலைத்தளத்தில் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் என்ன சொன்னேன் என்றால், இடைக்காலத் தடை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என்றேன். இந்தக் கருத்தினால் என்னை வெறுப்பவர்கள் என் ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேறுங்கள். எனது பேட்டி இன்னொருமுறை தவறுதலாக வெளிவரும்போது சந்திப்போம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டு தடை கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இது எங்களுக்கு புதிய தொடக்கம். எங்கள் அணி மீதான தடை விலகிவிட்டதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் இரு விஷயங்களை வெளியிட்டுள்ளோம். அதில் ஒன்று எங்கள் அணி இரு முறை பட்டம் வென்றது தொடர்பான காட்சிகள். மற்றொன்று 2011 ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதல் ஓவரிலேயே கெயிலை அஸ்வின் வீழ்த்தியது தொடர்பான காட்சியாகும். இதுதவிர சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்திருந்தால், அதை பதிவிடுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். சென்னை அணியை பிரபலப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் தொடங்கிவிட்டோம்.
ஏராளமான ஸ்பான்சர்கள் எங்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறார்கள். ரசிகர்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் எங்களுக்கு இருக்கிறது. கேப்டன் தோனியை மீண்டும் சென்னை அணிக்காக ஆடவைப்போம். புணே அணியுடனான தோனியின் ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதியில் முடிகிறது. அவருடன் நாங்கள் இன்னும் பேசவில்லை. தோனி மட்டுமின்றி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன்டி பிக்கேல், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்டீவ் ரிக்ஸன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொண்டு வருவது பற்றி எங்கள் அணி நிர்வாகம் சிந்தித்து வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...