சுநீல் நரேன் அதிவேக அரை சதம்; பெங்களூரை பந்தாடியது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
சுநீல் நரேன் அதிவேக அரை சதம்; பெங்களூரை பந்தாடியது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
அந்த அணியின் தொடக்க வீரர் சுநீல் நரேன் 15 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரை சதம் கண்டவரான யூசுப் பதானின் சாதனையை சமன் செய்தார்.
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள கொல்கத்தா, ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணி, முதல் பந்திலேயே கெயிலின் விக்கெட்டை இழந்தது. அவர், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கம்பீரிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து வந்த கேப்டன் கோலி 5 ரன்களில் நடையைக் கட்ட, மன்தீப் சிங்குடன் இணைந்தார் டிவில்லியர்ஸ். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. டிவில்லியர்ஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் சுநீல் நரேன் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதன்பிறகு மன்தீப் சிங்குடன் இணைந்தார் டிராவிஸ் ஹெட். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி, பெங்களூரை சரிவிலிருந்து மீட்டது. மன்தீப் சிங் 41 பந்துகளில் அரை சதமடித்தார். அந்த அணி 15.1 ஓவர்களில் 105 ரன்களை எட்டியபோது மன்தீப் சிங்கின் விக்கெட்டை இழந்தது. அவர் 43 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு வந்த கேதார் ஜாதவ் 8 ரன்களில் நடையைக் கட்ட, பவன் நெகி களம்புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் அரை சதம் கண்டார். உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் பவன் நெகி பவுண்டரி அடித்த கையோடு ஆட்டமிழந்தார். அவர் 5 ரன்கள் எடுத்தார். அதே ஓவரின் கடைசி 3 பந்துகளில் டிராவிஸ் ஹெட் 2 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாச, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது பெங்களூர்.
டிராவிஸ் ஹெட் 47 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், சுநீல் நரேன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
நரேன்-கிறிஸ் விளாசல்: பின்னர் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின்-சுநீல் நரேன் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. அனிகெட் செளத்ரி வீசிய முதல் ஓவரில் கிறிஸ் லின் தொடர்ச்சியாக இரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்ட, அடுத்த ஓவரை வீசிய சாமுவேல் பத்ரீ 6 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
யுவேந்திர சாஹல் வீசிய அடுத்த ஓவரில் கிறிஸ் லின் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாச, 3 ஓவர்களில் 34 ரன்களை எட்டியது கொல்கத்தா.
4-ஆவது ஓவரை நம்பிக்கையோடு வீசிய சாமுவேல் பத்ரீயை சுநீல் நரேன் பதம்பார்த்தார். அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் மூன்று சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் நரேன் பறக்கவிட, அந்த ஓவரின் முடிவில் 59 ரன்களை எட்டியது கொல்கத்தா.
அரவிந்த் வீசிய அடுத்த ஓவரை எதிர்கொண்ட சுநீல் நரேன், முதல் பந்தில் 2 ரன்களையும், அடுத்த 3 பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரிகளையும் விளாசினார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர் 5-ஆவது பந்தில் சிக்ஸரை விளாசி 15 பந்துகளில் அரை சதம் கண்டார். கடைசிப் பந்தில் அவர் பவுண்டரியை விளாச, 5 ஓவர்களில் 85 ரன்களை எட்டியது கொல்கத்தா.
சாஹல் வீசிய அடுத்த ஓவரில் கிறிஸ் லின் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விரட்ட, 6 ஓவர்களில் 105 ரன்கள் குவித்தது கொல்கத்தா. ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளேயில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
தொடர்ந்து அதிரடியாக ஆட முயன்ற சுநீல் நரேன், அனிகெட் செளத்ரி வீசிய 7-ஆவது ஓவரின் முதல் பந்தில் கேதார் ஜாதவிடம் கேட்ச் ஆனார். அவர் 17 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து டி கிராண்ட்ஹோம் களமிறங்க, கிறிஸ் லின் அரை சதமடித்த கையோடு ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் குவித்தார். இதையடுத்து கேப்டன் கெளதம் கம்பீர் களமிறங்க, டி கிராண்ட்ஹோம் 28 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் கம்பீர் 14 ரன்களில் வெளியேற, 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து வெற்றி கண்டது கொல்கத்தா. மணீஷ் பாண்டே 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூர் தரப்பில் பவன் நெகி 2 விக்கெட் வீழ்த்தினார். சுநீல் நரேன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூர் அணி, 10-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

இதுபோன்ற (சுநீல் நரேன்-கிறிஸ் லின் ஜோடி) ஒரு பார்ட்னர்ஷிப்பை பார்த்ததில்லை. வியக்கத்தக்க முயற்சி. சுநீல் நரேனை தொடக்க வீரராக களமிறக்கியது ஒட்டுமொத்த அணியின் முடிவாகும்.
-கெளதம் கம்பீர், கொல்கத்தா கேப்டன்

இன்றைய ஆட்டம்
ஹைதராபாத்-மும்பை
இடம்: ஹைதராபாத், நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com