ஆசிஷ் நெஹ்ரா பற்றிய ஆறு 'அடடே' தகவல்கள் ! 

இந்திய கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா வரும் நவம்பர் 1-ஆம் தேதி அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 ஆசிஷ் நெஹ்ரா பற்றிய ஆறு 'அடடே' தகவல்கள் ! 

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா வரும் நவம்பர் 1-ஆம் தேதி அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

1999-இல் முகமது அசாருதீன் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோது, இந்திய அணியில் அறிமுகமானார் நெஹ்ரா. கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியிருக்கும் நெஹ்ரா, கடந்த ஓர் ஆண்டாக அணியில் இடம்பெறாத நிலையில், திடீரென ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் இன்று ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக எடுத்துள்ளார். இதுவரை 17 டெஸ்ட், 120 ஒரு நாள் போட்டி, 26 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள நெஹ்ரா, முறையே 44, 157, 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-நியூஸிலாந்து இடையிலான முதல் டி20 ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என அவர் இன்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெஹ்ரா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

1. கடந்த 24.02.1999 அன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கான 420-ஆவது வீரராக ஆசிஷ் நெஹ்ரா களமிறங்கினார். தற்பொழுதைய இந்திய அணி தேர்வுக் குழுத் தலைவராக இருக்கும் எம்.எஸ்.கே.பிரசாத் அப்பொழுது டெஸ்ட் போட்டிகளில் விளையாடவே இல்லை. அவர் 10.10.1999 அன்றுதான் களமிறங்கினார் என்பது கவனிக்கத்தக்கது.

2.கடந்த 2003-ஆம் ஆண்டு அப்பொழுது தில்லி 15 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடிய தற்போதைய இந்திய அணித் தலைவர் விராட் கோலிக்கு, விருது ஒன்றினை ஆசிஷ் நெஹ்ரா வழங்கும் படம் இணையத்தில் வைரலாகப் பரவியது.

3.நெஹ்ரா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் துவங்கிய பிறகுதான் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட மூன்று அணிகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றன.

4.நெஹ்ராவுக்கு முன்னால் கிரிக்கெட் விளையாடத் துவங்கிய யாருமே தற்பொழுது சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5.2004-ஆம் ஆண்டு நெஹ்ரா தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் பொழுது ட்வெண்டி -20 என்னும் பிரிவு சர்வதேச கிரிக்கெட்டில் இல்லை.

6.நெஹ்ரா தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வைத் துவங்கும் பொழுது, தற்பொழுதைய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு நான்கு வயது; அக்சர் படேல் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய இருவருக்குமே ஐந்து வயது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com