தேசிய டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற தஞ்சாவூர் மாணவிகள், சர்வதேச போட்டிக்குத் தகுதி பெற்றும் நிதி வசதியின்மையால் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
தஞ்சாவூரில் ஜூன் 28-ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் குந்தவை நாச்சியார் அரசுக் கல்லூரியைச் சேர்ந்த 11 மாணவிகள் தங்கப் பதக்கத்தை வென்றனர். இதன் மூலம் அனைவரும் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பகுவாராவில் ஜூலை 12 முதல் 14-ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 17 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் குந்தவை நாச்சியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 7 பேர் தங்கப் பதக்கமும், 3 பேர் வெள்ளிப் பதக்கமும், ஒருவர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இப்போட்டியின் மூலம் தங்கப் பதக்கம் வென்ற என். குறளரசி (எம்.எஸ்ஸி. கணிதம் இரண்டாமாண்டு), ஏ. சண்முகப்ரியா (பி.ஏ. ஆங்கிலம் மூன்றாமாண்டு), என். சீதாலஷ்மி (பி.எஸ்ஸி. கணிதம் இரண்டாமாண்டு), எஸ். மஞ்சு (பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு), ஜி. அகிலா (பி.ஏ. தமிழ் இரண்டாமாண்டு), டி. உதயமதி (பி.எஸ். பொருளியல் மூன்றாமாண்டு), ஆர். துர்கா (பி.எஸ்ஸி. இயற்பியல் மூன்றாமாண்டு) ஆகியோர் சர்வதேச போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
தாய்லாந்து நாட்டில் 3 மாதங்களில் சர்வதேச போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில், குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகள் 7 பேர் பங்கேற்கத் தகுதி பெற்றிருந்தாலும், இவர்களிடம் தாய்லாந்து நாட்டுக்குச் செல்வதற்கு நிதி வசதி இல்லை.
இதுகுறித்து அக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் தேன்மொழி, பயிற்சியாளர் சுந்தர் ஆகியோர் கூறியது: பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிக்கு இக்கல்லூரி மாணவிகள் தங்களுடைய சொந்த செலவில் சென்று வந்தனர். இதில், ஒவ்வொருக்கும் தலா ரூ. 5,000 செலவானது. மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களுடைய திறனையும் வளர்த்துக் கொண்டதால்தான் இந்த அளவுக்குச் சாதனைப் படைக்க முடிந்தது. இதற்கு இக்கல்லூரியும் ஊக்கம் அளித்தது.
தாய்லாந்தில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்று திரும்ப ஒருவருக்கு விசா, பயணக் கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு ரூ. 60,000 வீதம் செலவாகும். சர்வதேசப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இவர்களிடம் தகுதியும், திறமையும் இருக்கிறது. அதில் வெற்றி பெற்றால், உலக அளவில் நம் நாட்டுக்கும் பெருமை. இதன் மூலம் இவர்களுக்குத் தேசிய அளவிலான விருதும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.
வீராங்கனை குறளரசி கூறுகையில்: கல்விக் கட்டணம் செலுத்துவதற்கே மிகவும் சிரமப்படும் நிலையிலும் டேக்வாண்டோ போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் சாதனை படைத்தாலும், இவர்களுக்கு நிதி வசதி இல்லாதது மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. நிதியுதவி கிடைக்காவிட்டால் சர்வதேச போட்டியில் பங்கேற்க இயலாது என்றார்.
கிராமப்புற வீரர்களுக்கு நிதி வசதி இல்லாததால் விளையாட்டில் சாதனைப் படைப்பதற்கு எட்டாக்கனியாக இருக்கிறது. இவர்களை ஊக்கப்படுத்தும் அளவுக்கு அரசுத் தரப்பிலும் உதவி கிடைக்காததால், ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பது வேதனைக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

Ban NEET! Ban NEET! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்!
உதயநிதி தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

பின்னாளில் அழாதீர்கள்! அகிலேஷ் யாதவை கூட்டணிக்கு அழைத்த ஓவைசி!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET



