ஒரே நாளில் 15 விக்கெட்டுகள்: பூம்ராவின் 6 விக்கெட்டுகளால் 346 ரன்களுடன் இந்திய அணி முன்னிலை!

3-வது நாளின் இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 346 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது...
ஒரே நாளில் 15 விக்கெட்டுகள்: பூம்ராவின் 6 விக்கெட்டுகளால் 346 ரன்களுடன் இந்திய அணி முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 3-வது நாளின் இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 346 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில்  ஆஸ்திரேலிய அணி, 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பூம்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற உதவினார்.

ஆஸி.க்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா 106, ரோஹித் 63 ரன்களை குவித்தனர். பின்னர் ஆடிய ஆஸி. அணி 2-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்தது. 

இன்று அதிகாலை எழுந்து இந்தியாவின் பந்துவீச்சைப் பார்த்தவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதைக் காணும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

நேற்றே இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அருமையாகப் பந்துவீசி நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். அதே அசத்தல் பந்துவீச்சு இன்றும் தொடர்ந்தது. இதனால் ஆரம்பமே முதல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள். ஃபீல்டர்களைச் சரியான இடத்தில் நிற்கவைத்து கோலி மேலும் தன் பங்குக்கு பந்துவீச்சாளர்களுக்கு உதவினார். முதல் விக்கெட் அப்படித்தான் கிடைத்தது. மயங்க் அகர்வாலின் அசத்தலான கேட்சினால் இஷாந்த் சர்மா பந்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஃபிஞ்ச். பூம்ராவின் பவுன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் 22 ரன்களுக்கு வெளியேறினார் ஹாரிஸ். கவாஜா, ஜடேஜா பந்துவீச்சில் 21 ரன்களில் வெளியேறினார். உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் அட்டகாசமான உத்தியைக் கையாண்டு ஷான் மார்ஷை 19 ரன்களில் வெளியேற்றி அற்புதமான காலை வேளையை இந்திய அணிக்கு உருவாக்கினார் பூம்ரா. 

இந்தத் தொடரில் நன்கு விளையாடி வரும் ஹெட் இந்தமுறை 20 ரன்களில் பூம்ரா பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். மிட்செல் மார்ஷும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் 9 ரன்களில் வெளியேறி ஆஸி. ரசிகர்களை மேலும் ஏமாற்றினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பெயினும் கம்மின்ஸும் பொறுப்புடன் விளையாடினார்கள். ஆனால் அதுவும் நீண்டநேரம் நீடிக்கவில்லை. ஷமியின் அற்புதமான பந்துவீச்சுக்கு தன்னுடைய விக்கெட்டை 17 ரன்களில் பறிகொடுத்தார் கம்மின்ஸ். இதற்கு முந்தைய டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணியின் கடைசி 3 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி அதிகமாகப் போராடியது. இந்தமுறை அப்படி நிகழவில்லை. பெயின் 22 ரன்களில் வெளியேற அடுத்ததாக வந்த லயனும் ஹேஸில்வுட்டும் ரன் எதுவும் எடுக்காமல் பூம்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்மூலம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்குள் சுருண்டு போக முக்கியக் காரணமாக இருந்தார் பூம்ரா.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி292 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆன் ஆனாலும் மீண்டும் பேட்டிங் செய்வதாக அறிவித்தது இந்திய அணி. 

இதற்குப் பிறகு யாரும் எதிர்பாராத இன்னொரு திருப்பம் ஏற்பட்டது. ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் கடகடவென இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். 13-வது ஓவர் வரை நிலைத்து நின்று ஆடினார்கள் மயங்க் அகர்வாலும் விஹாரியும். பிறகு முதல் இன்னிங்ஸ் போலவே இந்தமுறையும் பவுன்சர் பந்தில் 13 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார் விஹாரி. முதல் இன்னிங்ஸில் சதமடித்து இந்திய அணிக்குப் பெரிதும் உதவிய புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிறகு வந்த கோலியும் ரன் எதுவும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தினார். இவர்கள் வெளியேறியது போதாது என்று ரஹானேவும் 1 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, என்னதான் நடக்கிறது என்று புரியாமல் தவித்தார்கள் இந்திய ரசிகர்கள். முதலில் விழுந்த 4 விக்கெட்டுகளையும் எடுத்து ஆஸி. அணிக்குப் புத்துணர்ச்சி அளித்தார் கம்மின்ஸ். இதன்பிறகு 18 பந்துகள் வரை எதிர்கொண்டு 5 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

3-ம் நாளின் முடிவில் தனது 2-வது இன்னிங்ஸில் 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. மயங்க் அகர்வால் 28, ரிஷப் பந்த் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்தாலும், 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 346 ரன்கள் முன்னிலை பெற்று இந்த டெஸ்டில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது இந்திய அணி. 

4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com