எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆப்கானிஸ்தான் ஃபாலோ ஆன்! அஸ்வின் 4 விக்கெட்டுகள்!

முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து பாலோ ஆன் ஆகியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

News image
Updated On :15 ஜூன் 2018, 9:02 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான பெங்களூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து பாலோ ஆன் ஆகியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

பெங்களுருவில் நேற்று தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதல் நாளன்று இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 347 ரன்களைக் குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவன் (107), முரளி விஜய் (105) ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர். ஹர்திக் பாண்டியா 10, அஸ்வின் 7 ரன்களுடன் துவக்க நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் அஸ்வின் 18 ரன்களில் அஹ்மத்ஸாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்தபிறகு ஜடேஜா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களில் மிகவும் பொறுப்புடன் விளையாடிய பாண்டியா 83 பந்துகளில் அரை சதமெடுத்தார். பிறகு அவரும் 10 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து வஃபாதார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 400 ரன்கள் தாண்டுவதற்கு பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. கடைசி விக்கெட்டுக்கு இஷாந்த் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த உமேஷ் யாதவ், வஃபாதார் வீசிய 102-வது ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க, இஷாந்த் சர்மா கூடுதலாக 1 பவுண்டரி அடித்து அந்த ஓவரில் மொத்தமாக 21 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். கடைசியில் இஷாந்த் சர்மா, ரஷித் கான் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ், 21 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Story image

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 104.5 ஓவர்களில் 474 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் யாமின் அஹ்மத்ஸாய் 3 விக்கெடுட்டுகளும் வஃபாதார், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள், இந்திய வேகப்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள். முகமது ஷஸாத் 14 ரன்களில் பாண்டியாவின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ஆட்டமிழந்தார். ஜாவத் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் இஷாந்த் பந்துவீச்சில் போல்ட் ஆனார். ரஹ்மத் ஷா 14 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அஃப்சார் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இஷாந்த் பந்தில் போல்ட் ஆனார். இதனால் 35 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது ஆப்கானிஸ்தான். 

இதற்குப் பிறகு பின்வரிசை வீரர்கள் பக்குவமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப்பந்துவீச்சுக்குப் பிறகு சுழற்பந்து வீச்சு ஆப்கானிஸ்தானை மேலும் தடுமாற வைத்தது. கேப்டன் அஸ்கார், அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அவர் 11 ரன்கள் எடுத்தார். அதே 11 ரன்களில் ஹஷ்மதுல்லா அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரஷித் கான் உள்ளே நுழைந்தபோது அவரிடமிருந்து அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் 7 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அஹ்மத்ஸாய் டக் அவுட் ஆனார். அவர் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார். 44 பந்துகள் வரை தாக்குப்பிடித்து அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்த முகமது நபி, அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். கடைசியாக முஜீபின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி, 27.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 365 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.