நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜெர்மனிக்கு செக்' வைத்த தென் கொரியா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறியிருப்பது மிகப்பெரிய திருப்பத்தை

News image
Updated On :29 ஜூன் 2018, 4:49 am

ஏ.வி. பெருமாள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறியிருப்பது மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெர்மனியின் தோல்வி அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ஜெர்மனியை வீழ்த்தியது தென் கொரிய அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கும் என நம்பலாம். இனி உலகின் எந்த அணியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை தென் கொரியா மட்டுமல்ல, ஆசிய அணிகள் அனைத்தும் நிச்சயம் பெற்றிருக்கும். 
உலகக் கோப்பை வரலாற்றில் நடப்பு சாம்பியன்கள் முதல் சுற்றோடு வெளியேறுவது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்கிறது. 2002-இல் அப்போதைய நடப்பு சாம்பியன் பிரான்ஸ், 2010-இல் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இத்தாலி, 2014-இல் நடப்பு சாம்பியனாக களம்புகுந்த ஸ்பெயின் ஆகியவை முதல் சுற்றோடு வெளியேறின. இந்த நிலையில் தற்போதைய நடப்பு சாம்பியனான ஜெர்மனியும் முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. 
80 ஆண்டுகளில்...: எனினும் உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த 80 ஆண்டுகளில் ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் 1938-இல் முதல் சுற்றோடு வெளியேறிய ஜெர்மனி, அதன்பிறகு இப்போதுதான் முதல் சுற்றைத் தாண்ட முடியாத சோகத்தோடு நாடு திரும்பியுள்ளது. 
கடந்த 4 உலகக் கோப்பை போட்டிகளை எடுத்துக் கொண்டால், 2002-இல் இறுதிச் சுற்று வரையும், 2006, 2010 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதி வரையும் முன்னேறிய ஜெர்மனி, 2014-இல் உலக சாம்பியனானது. அதனால் அந்த அணி இந்த உலகக் கோப்பையிலும் நிச்சயமாக அரையிறுதிக்கு முன்னேறும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கணிப்பை தென் கொரியா தகர்த்திருக்கிறது.
கவனம் ஈர்த்த தென் கொரியா: இந்த வெற்றிக்கான அனைத்து பாராட்டுகளும் தென் கொரியாவின் கோல் கீப்பர் சோ ஹியூன் ஊ, ஸ்டிரைக்கர் சன் ஹியூங்மின் ஆகியோரையே சேரும். மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோ ஹியூன், ஜெர்மனியின் பல கோல் வாய்ப்புகளை முறியடித்ததன் மூலம் கால்பந்து உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதன்மூலம் இனி வரும் காலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தொழில்முறை கால்பந்து போட்டியில் ஆடும் வாய்ப்பு ஆசியரான சோ ஹியூனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைத்து மதிப்பிடல்: தலைசிறந்த ஸ்டிரைக்கரான சன் ஹியூங்மின், ஜெர்மனிக்கு எதிராக ஒரு கோல் அடித்தது மட்டுமின்றி, 5 முறை இலக்கை நோக்கி பந்தை அடித்ததோடு, 3 முறை கோலடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். இதுதவிர ஒரு முறை ஜெர்மனியின் கோல் வாய்ப்பை முறியடித்தார். உலகின் தலைசிறந்த அணியாகவும், முதல் நிலை அணியாகவும் திகழ்ந்தபோதும், உலகக் கோப்பையில் முதல் சுற்றைக்கூட தாண்ட முடியாமல் போனதற்கு அணித் தேர்வில் தொடங்கி, எதிரணிகளை குறைத்து மதிப்பிட்டது வரை ஏராளமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தத் தோல்வி ஜெர்மனி அணியில் ஏராளமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என நம்பலாம். 

தடம் பதித்த ஆசிய அணி
ஜெர்மனியின் தோல்வி குறித்து இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ராமன் விஜயன் கூறியதாவது: நடப்பு சாம்பியன்கள் ஆரம்பக் கட்ட ஆட்டங்களில் தோற்பது காலம் காலமாக நடக்கும் ஒரு விஷயம்தான். எனினும் ஜெர்மனி முதல் ஆட்டத்தில் சந்தித்த தோல்வி, அந்த அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. 2-ஆவது ஆட்டத்தில்கூட அந்த அணி போராடித்தான் வென்றது. 
அதேநேரத்தில் தென் கொரியாவின் ஆட்டத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். தென் கொரியா ஏற்கெனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டபோதிலும், ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லை. மிகுந்த நம்பிக்கையோடு விளையாடியது. ஜெர்மனி போன்ற ஒரு அணியை கோலடிக்கவிடாமல் தடுப்பதே மிகப்பெரிய விஷயமாகும். ஆனால் தென் கொரியா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் சரித்திரம் படைக்கிறது. இதன்மூலம் ஜெர்மனியை வீழ்த்தி முதல் ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. இது ஆசியாவைச் சேர்ந்த நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். இதன்மூலம் ஐரோப்பியர்கள் ஆதிக்கம் செலுத்தும் கால்பந்தில் ஆசிய அணிகளாலும் தடம்பதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எதிர்காலத்தில் நாமும் கால்பந்தில் சாதிக்க முடியும் என நம்புகிறேன் என்றார் ராமன் விஜயன். 

அணித் தேர்வும் காரணம்
சென்னையைச் சேர்ந்த கால்பந்து விமர்சகரான நாசர் கூறியதாவது: ஜெர்மனியின் தோல்விக்கு அணித் தேர்வு மிக முக்கியமான காரணமாகும். மிட்ஃபீல்டைப் பொறுத்தவரையில் டோனி குரூஸ் மட்டுமே சிறப்பாக ஆடினார். மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டனர். மிட்ஃபீல்டில் அதிவேகமாக செயல்படக்கூடிய வீரரான லீராய் சனேவுக்கு வாய்ப்பளிக்க ஜெர்மனி பயிற்சியாளர் தவறிவிட்டார். 
மெசூத் ஒஸில் போன்ற முன்னணி வீரர்களின் ஆட்டம் மெச்சும்படி இல்லை. ஜெர்மனியின் கேப்டனும், கோல் கீப்பருமான மானுவேல் நூயர் காயத்திலிருந்து மீண்ட பிறகு பெரிய அளவிலான போட்டிகளில் விளையாடாத நிலையில் உலகக் கோப்பையில் களமிறங்கினார். பழைய ஃபார்முக்கு திரும்பாத நிலையில் அவரால் தென் கொரியாவின் கோல் வாய்ப்புகளை முறியடிக்க முடியவில்லை. 
கடந்த உலகக் கோப்பையை எடுத்துக்கொண்டால் ஜெர்மனி அணியில் இடம்பெற்றிருந்த பிலிப் லேம்ப், மிரோஸ்லாவ் க்ளோஸ் போன்ற வீரர்கள் தங்களின் அபார ஆட்டத்தால் அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இந்த உலகக் கோப்பை போட்டியின் பயிற்சி ஆட்டம் முதலே ஜெர்மனியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அந்த அணியில் தலைசிறந்த வீரர்கள் அதிகம் இருந்ததால், வீரர்களைத் தேர்வு செய்வதிலும் ஏராளமான குழப்பம் ஏற்பட்டது. முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோவிடம் தோற்றது ஜெர்மனிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அங்கிருந்தே அந்த அணியின் சரிவு தொடங்கிவிட்டது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.